Skip to main content

தனுஷ் - நயன்தாரா விவகாரமும், சாஃப்ட் ஹிட்லர் மனநிலையும் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்:77

Published on 19/11/2024 | Edited on 19/11/2024
jay zen manangal vs manithargal 77

உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே நடக்கும் பிரச்சனையைக் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். 

இந்த பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியாக நயன்தாரா தரப்பு நானும் ரெளடி தான் பட 3 நொடி காட்சியைத் தனது ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷிடம் உரிமம் கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் இரண்டு வருடமாக அமைதியாக இருந்திருக்கிறார். இந்த மனநிலையை பதில் சொல்லாமல் சொல்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ரொம்ப நாகரீகமாக இருப்பவர்கள் உரிமத்தை கேட்ட பிறகு அதைக் கொடுக்கவில்லையென்றால் அதைவிட்டு கடந்து செல்வார்கள். ஆனால் அதைப் பொதுவெளியில் தவறாகப் பேசும் மனநிலையும் பிரச்சனைக்குரிய மனநிலைதான். 

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இங்கு கூத்தாடி ரெண்டுபட்டு ஊரே கொண்டாடுகிறது. வந்தவர் போனவர்கள் எல்லோரும் நியாயம் பேசுவார்கள். நாம் அதிலுள்ள மனநிலையை மட்டும் எடுத்துக்கொள்வோம் சரி, தவறு என்று பேசிக்கொள்ள வேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. கேட்டதைக் கொடுக்காமல் சந்தோசப்படும் மனநிலையும் கொடுக்காமல் இருந்தவரைப் பற்றி தவறாக பொது வெளியில் பேசும் மனநிலையும் ஒன்றுதான். இரண்டும் வெவ்வேறானது இல்லை. இப்போது பொதுவெளியில் பேசியதால் கொடுக்காமல் இருந்தவரும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப்பார். அதனால் அந்த ஜெர்மானிய வார்த்தை இரண்டு பக்கமும் பொருந்தும். 

இதுபோன்ற மற்றவர்களின் துயரத்தில் சந்தோஷப்படும் மனநிலையால் ஏகப்பட்ட மன முறிவுகள் நடக்கிறது. இரண்டு நடிகர்களுக்கு இடையில் நடப்பதால் இதைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இந்த மனநிலையால் பல தம்பதிகள் பாதிக்கப்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ளனர். உதாரணத்திற்குக் கணவர் மனையிடம் நகவெட்டி எங்கு இருக்கிறது?என்று கேட்பார். மனைவிக்கு நகவெட்டி எங்கு இருக்கிறது என்று தெரியும். இருந்தாலும் அதை வைத்த இடத்தில் தேடுங்கள் என்று சொல்லுவார். அதே போல் மனைவி காரில் போக வேண்டுமென்று கார் சாவியைக் கணவரிடம் கேட்பார். அவர் கணவர், தன் மனைவி என்ன தொனியில் சொன்னாரோ அதே தொனியில் நீயும் வீட்டில்தானே இருக்கின்றாய் தேடு என்று சொல்லிப் பலி வாங்குவார்.

அண்ணன் தம்பி உறவிலும் இதுபோன்ற மனநிலை வெளிப்படும். அண்ணன் ஒருவர் வாழ்க்கையில் சம்பாதித்து பெரிய ஆளாக மாறிய பிறகு, வாழ்க்கையில் வளர்ச்சியடையாத தன் தம்பியைப் பார்த்து உழைத்திருக்க வேண்டும் என்று சொல்வார். தன் தம்பி வளராமல் இருப்பதைப்பார்த்து அண்ணன் சந்தோசப்படுகிறார் என்பதுதான் இதன் சரியான விளக்கம். முறையாக அவர் தனது தம்பிக்கு உதவியிருக்க வேண்டும். நயன்தாரா சொன்ன ஜெர்மன் வார்த்தைக்கான மனநிலை எல்லோரிடமும் இருக்கிறது. ஹிட்லர் யூதர்களைக் கொன்றது அதில் சந்தோஷப்பட்டது கொடூரமான மனநிலையென்றால். இன்றைக்கு ஒவ்வொருவரும் அதுபோல சின்ன விஷயங்களுக்குப் பிறரை வேதனையைப்படுத்தி சந்தோசப்படுவது என்பது மென்மையான ஹிட்லர் மனப்பான்மைதான் என்றார்.
 

சார்ந்த செய்திகள்