திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வரும் தினேஷ்(17) என்ற மாணவன், கடந்த மாதம் ருமேனியா நாட்டில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று, அதில் ஸ்குவாடு போட்டியில் வெள்ளி பதக்கமும், பென்ச்பிரஸ் போட்டியில் வெண்கல பதக்கமும், டெட்லிப்ட் போட்டியில் தங்க பதக்கமும், ஒட்டுமொத்த போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்று நாடு திரும்பியுள்ளார்.
அவரை நேரில் சந்தித்து பேசிய போது, “கடந்த 2016ல் நான் முதன்முதலாக திருச்சி மாவட்ட அளவிலான 100 கிலோ ஸ்குவாடு, 40 கிலோ பெஞ்ச் பிரஸ் என்ற இரண்டு போட்டிகளில் முதன்முதலாக தங்கம் பெற்றேன். அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் நான் பதக்கம் பெறவில்லை. 2022ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் டெட் லிப்ட் பிரிவில் வெள்ளி பதக்கமும், ஒட்டுமொத்த போட்டியிலும் புள்ளிகள் அடிப்படையில் வெண்கல பதக்கமும் பெற்றேன்.
மீண்டும் 2022 நவம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டில் ஆக்லேண்டு என்ற இடத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று ஸ்குவாடு 200 கிலோ எடை பிரிவில் தங்கமும், 120 கிலோ பெஞ்ச் பிரஸ் பிரிவில் தங்கமும், டெட் லிப்ட் பிரிவில் தங்கமும் வென்றுள்ளேன். மேலும் ஸ்ட்ராங்மேன் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. டெட்லிப்டில் இதற்கு முன் இருந்த 217.5 கிலோ தான் சாதனையாக இருந்தது. நான் அதை முறியடித்து 218 கிலோவை தூக்கி முந்தைய சாதனையை முறியடித்தேன்.
மீண்டும் 2023 காஷ்மீரில் நடைபெற்ற பெடரேசன் போட்டியில் பென்ச் பிரஸ், ஸ்குவாடு என்ற இரண்டு போட்டிகளிலும் தங்கம் வென்று, ஒட்டுமொத்த போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று தங்கம் வென்றேன். இந்தாண்டு மே மாதம் கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் ஸ்குவாடு, பெஞ்ச்பிரஸ், டெட்லிப்ட் போன்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றேன். அதனைத் தொடர்ந்து இதே மே மாதத்தில் குற்றாலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சப்ஜீனியர் பிரிவில் போட்டியிட்டு ஸ்குவாடு பிரிவில் முந்தைய சாதனையான 230 கிலோவை பின்னுக்கு தள்ளி 235 கிலோ தூக்கி முந்தைய சாதனையை முறியடித்து தங்கம் வென்றேன். பென்ச் பிரஸ் பிரிவில் தங்கம் வென்றேன். டெட் லிப்ட் பிரிவில் முந்தைய சாதனையான 237.5 கிலோவை முறியடித்து 241 கிலோ வலுதூக்கி முந்தைய சாதனையை முறியடித்து தங்கம் வென்றேன். ஒட்டுமொத்த போட்டிகளிலும் முந்தைய சாதனையாக 610 கிலோ தூக்கியது தான் சாதனையாக இருந்தது. நான் 617 கிலோ தூக்கி அந்த சாதனையை முறியடித்தேன்.
இதுமட்டுமல்லாமல் வேல்டு சாம்பியன்சிப் செலக்சன் துப்பாக்கி சுடும் போட்டியில் இறுதி சுற்றுக்கான தேர்வில் 6 ஆவது நிலையில் உள்ளேன். மேலும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் என்ற பட்டமும் வென்றுள்ளேன். மேலும் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதில் நான் கடந்த மாதம் நடைபெற்ற வேல்டு சாம்பியன் போட்டியில் பங்கேற்க செல்லும்போது தான் என்னுடைய அம்மா அலமேலு ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அதுவே என்னுடைய மனநிலையை பலவீனப்படுத்தியது. அதனால்தான் என்னால் தங்கம் வெல்ல முடியாமல் போனது. ஆனால் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்” என்றார்.
அவருடைய தந்தை ராஜசேகரன் பேசும்போது, “நான் இதுவரை என்னுடைய மகனுக்காக 70 லட்சம் வரை கடனாக பெற்று அவனுக்கு உறுதுணையாக இருக்கிறேன். ஆனால் அவன் அடுத்த கட்டமாக ஒலிம்பிக் செல்வதற்கு இன்றைய நிலையில் நான் தகுதியில்லாமல் இருக்கிறேன். தமிழ்நாடு அரசு விளையாட்டுக்கு என்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. இருந்தாலும் அரசாங்கத்திடம் இருந்து எனக்கு எந்தவித உதவிக்கரமும் பெரிதாக கிடைக்கவில்லை. நான் இதற்காக கடந்த ஜுன் மாதம் 12ஆம் தேதி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியிருந்தேன். எந்தவித பதிலும் வரவில்லை. மீண்டும் ஜுன் 12ஆம் தேதி அடுத்த மனு அனுப்பினேன். அப்போது அரசிடம் போதிய நிதி இல்லை என்று பதில் அளித்தார்கள். அதேபோல் இண்டர்நேஷனல் பவர்லிப்ட்டிங் பெடரேசனில் இருந்து கிடைக்க வேண்டிய பரிசுத்தொகையையும் கிடைக்கவில்லை. இன்றைய நிலைக்கு நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னுடைய மகன் எப்படியாவது ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்வான். ஆனால், நான் அவனுடைய கனவை நிறைவேற்ற முடியாத தந்தையாக இருக்கிறேன். அரசு என்னுடைய இந்த செய்தியை மனுவாக ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்க உதவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.