அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 36 வயதான இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. மகளிர் டென்னிஸ் விளையாட்டில் தனக்கென தனித்த முத்திரை பதித்திருந்த செரீனா வில்லியம்ஸ், தனது மகள் அலெக்சிஸ் ஒலிம்பியாவை கவனித்துக் கொள்வதற்காக நீண்டகாலம் ஓய்வில் இருந்தார். இதனால், அவரது பெயர் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில், நடந்துமுடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைத் தொடர்ந்து உலக டென்னிஸ் அசோஷியேஷன் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி 181-ஆவது இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸ், 153 இடங்கள் முன்னேறி 28-ஆம் இடத்தைப் பிடித்தார். டாப் 30க்குள் தற்போது அவர் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். அவரோடு மோதி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியைச் சேர்ந்த ஆஞ்செலிக் கெர்பர் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். 7571 புள்ளிகளுடன் ரோமானியாவைச் சேர்ந்த சிமோனா ஹலீப் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.