தமிழக முதல்வர் இன்று கோவையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் திட்டங்களையும் தொடங்கி வைக்க இருக்கிறார்.
கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் திறக்க இருக்கிறார். எல்காட் நிறுவனம் சார்பில் 114.16 கோடி ரூபாயில் எட்டு தளங்களுடன் 3.94 ஏக்கரில் தொழில்நுட்பப் பூங்கா கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். ஆட்சியர் அலுவலகத்தில் தங்க நகை தொழில் அமைப்பை நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். வீட்டுவசதி வாரிய நில எடுப்பில் இருந்து விடுவித்த நிலங்களில் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்குகிறார்.
அதன்பின் போத்தனூரில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதனைத் தொடர்ந்து காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார். காந்திபுரத்தில் 133.21 கோடி ரூபாய் செம்மொழிப் பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறை மைதானத்தில் நூலகம், அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். பொதுநூலகத்துறை சார்பில் 300 கோடியில் ஏழு தளங்களுடன் நூலகம், அறிவியல் மையம் அமைகிறது. முதலமைச்சரின் வருகையை ஒட்டி கோவையில் 3,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் கோவை வந்துள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபட வாய்ப்புள்ளதாவும், ஆய்வுக்கூட்டங்களை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கோவை சென்றடைந்துள்ள முதல்வருக்கு திமுகவின் நிர்வாகிகள் பறையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகமாக வரவேற்றனர்.