இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பை, மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் தொடராக இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் துபாயில் வைத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் அதன் கடும் போட்டியாளரான பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி மோதுகின்றன.
சென்ற ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. அதன்பிறகு இந்த இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவென்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றின் மூலமாக தேர்வாகும் ஒரு அணி என முதன்முறையாக ஆறு நாடுகள் மோத இருக்கின்றன.
சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா, நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் தகுதிச்சுற்று போட்டிகளில் பங்குபெறுகின்றன. செப்டம்பர் 15-இல் தொடங்கும் இந்தத் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் வைத்து வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடக்கவுள்ளது.