பாகிஸ்தான் அணியின் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஃபகர் ஸமான் அடைந்துள்ளார்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, ஹராரேவில் உள்ள குவீன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டி பாகிஸ்தான் அணியின் முந்தைய சாதனைகளை முறியடிப்பதற்கு காரணமாக இருந்ததோடு, புதிய சாதனைகளுக்கும் வழிவகுத்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க இணையான ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை, அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. 304 ரன்கள் குவித்த அந்த இணை, 1994ஆம் ஆண்டு இன்ஜமாம் உல் ஹக் - ஆமிர் சொஹைல் இணையின் 263 ரன்கள் சாதனையை முறியடித்தது. அதேபோல், 399 ரன்கள் விளாசியதுதான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமான் பாகிஸ்தான் அணியின் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஐ.சி.சி. சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளில் மாற்றம் ஏற்படுத்தியதில் இருந்து, இரட்டை சதங்கள் அடிப்பது அசால்ட்டான ஒன்றாக மாறியிருக்கிறது. முழுமையாக இரண்டு சதங்களை ஒரே போட்டியில் நிகழ்த்துவது கடினம் என்றாலும், அதை சில வீரர்கள் சாத்தியமாக்கிக் காட்டுகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.