Skip to main content

"எனக்கு வேதனையாக இருக்கிறது" - பயிற்சியாளர் பதவியை உதறிய வாசிம் ஜாபர்...

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

wasim jaffer about allegation of communal approach

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து விளக்கமளித்துள்ளார். 

 

உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டுவந்த வாசிம் ஜாபர் மீது மதரீதியிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அணிக்கான வீரர்களை மதத்தின் அடிப்படையில் அவர் தேர்வு செய்கிறார் என்று உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் செயலாளர் நவ்நீத் மிஸ்ரா, அணியின் மேலாளர் மகிம் வர்மா ஆகியோர் வாசிம் ஜாபர் மீது குற்றம்சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார் வாசிம் ஜாபர். மேலும், தன் மீது சுமத்தப்பட்ட மத ரீதியிலான குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். 

 

இதுகுறித்து பேசியுள்ள அவர், "என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு வேதனையைத் தருகின்றன. நான் அணியிலிருந்த இஸ்லாமிய வீரர்களுடன் இணைந்து தொழுகை நடத்தியதை தொடர்புப்படுத்திப் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. தீவிரமானவை. மதரீதியான சாயம் என் மீது பூசப்படுவது எனக்கு வேதனையாக இருக்கிறது. என்னை கிரிக்கெட் வட்டாரத்தில் பல ஆண்டுகளாகப் பலருக்கும் தெரியும். நான் எப்படிப் பழகுவேன் என்பதும் தெரியும்.

 

நான் உத்தரகாண்ட் அணியில் திறமையின் அடிப்படையில்தான் வீரர்களைத் தேர்வு செய்தேன். முஸ்டாக் அலி கோப்பையில் கூட சமது ஃபல்லா எனும் முஸ்லிம் வீரர் 4 போட்டிகளில் விளையாடினாலும் அவர் சரியாக விளையாடவில்லை என்பதால் நீக்கினேன். முகமது நசீம், சமத் ஃபல்லா ஆகியோரை அனைத்துப் போட்டிகளிலும் நான் விளையாட வைத்திருக்கலாம். ஆனால், திறமைக்குத்தான் முக்கியத்துவம் அளித்தேன். புதிய வீரர்களுக்கும், திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்பினேன். இவ்வாறு நான் செயல்பட்டது மதரீதியான செயல்பாடா? 

 

பரோடாவில் நாங்கள் முஷ்டாக் அலி கோப்பைக்காக விளையாடச் சென்றபோது, வீரர்களின் ஸ்ரீ ராம கோஷத்தைத் தடுத்ததாகக் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் மதரீதியாகச் செயல்பட்டிருந்தால், ‘அல்லாஹ் அக்பர்’ என்றுதானே அவர்களை முழக்கமிடச் சொல்லியிருக்க வேண்டும். உத்தரகாண்ட் அணியில் இருக்கும் இஸ்லாமிய வீரர்களுடன் வெள்ளிக்கிழமை மட்டும் நான் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அன்று ஒருநாள் மட்டும் நமாஸ் செய்வோம். பயோ-பபுளுக்கு எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லாமல், 5 நிமிடங்கள் கூட்டாக நமாஸ் செய்வோம். ஒருவேளை நான் மதரீதியாகச் செயல்பட்டிருந்தால், என்னை உத்தரகாண்ட் நிர்வாகம் நீக்கியிருக்கும். நான் ராஜினாமா செய்திருக்கமாட்டேன். 

 

உத்தரகாண்ட் கிரிக்கெட் நிர்வாகத்தின் தேர்வுக் குழுவில் நிர்வாகிகள் தலையீடு, தகுதியில்லாத வீரர்களை அணியில் சேர்ப்பது போன்றவை நடக்கின்றன. இதனை நான் எதிர்த்துப் பேசி, சுதந்திரமாகச் செயல்படக் கோரினேன்" எனத் தெரிவித்துள்ளார்.