இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு பெருத்த சவாலாகவே இருக்கிறது. டி20 தொடரில் இந்திய அணி வென்றிருந்தாலும், ஒருநாள் தொடரில் தாங்கள்தான் நம்பர் ஒன் என்பதை நிரூபித்துக் காட்டியது இங்கிலாந்து அணி. முந்தைய காலத்தைவிட இந்திய அணி வலுவான ஒன்றாக மாறியிருந்தாலும், இன்னமும் இங்கிலாந்து தொடரில் வெற்றி என்பது தெளிவற்றதாகவே இருக்கிறது.
போதாக்குறையாக எந்த இடத்தில் யாரை இறக்கலாம் என்ற குழப்பமும் நீடித்திருக்க, இந்திய அணியை வெளிநாட்டு மண்ணில் தலைநிமிரச் செய்த முன்னாள் கேப்டன், சில அறிவுரைகளைத் தந்துள்ளார். அதாவது, டெஸ்ட் போட்டியைப் பொருத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக ஒத்துழைத்தால், அடுத்தடுத்து வருபவர்களுக்கு நிலைமை சாதகமாக இருக்கும் என்பதால், ஓப்பனிங் வரிசையை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஏனெனில், முரளி விஜய், ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் என மூன்று ஆப்ஷன்கள் நமக்கு இருந்தாலும், வலது-இடது காம்பினேஷனுக்காக முரளி விஜய், ஷிகர் தவான் இணையே களமிறங்கும். ஆனால், ஒருநாள் போட்டிகளில் அதிரடி கிளப்பும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டிகளில் அதைக் கடைபிடிக்கத் தவறுவதாக கங்குலி கருதுகிறார். எனவே, அவருக்கு பதிலாக முரளி விஜய்யுடன் கே.எல்.ராகுல் இறங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். இருந்தாலும், ஆப்கானிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் அதிவேக சதமடித்ததால், வாய்ப்பு அவருக்கே வழங்கப்படலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது.