Skip to main content

"தோனி ஓய்வை அறிவித்த விதம் சரியல்ல..." பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிருப்தி!!!

Published on 17/08/2020 | Edited on 18/08/2020

 

Dhoni

 

 

சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்த விதம் சரியானதல்ல என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் மற்றும் வெற்றி கேப்டனாக வலம் வந்த தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கடைசியாக நடந்த உலக கோப்பை போட்டிக்கு பின்பு எந்த போட்டியிலும் விளையாடாத தோனி தன் ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தோனி தன்னுடைய ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து தோனி தன்னுடைய ஓய்வு முடிவினை அறிவித்தார். தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், தோனியின் ஓய்வு குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து கருத்து கூறிய இன்சமாம் உல்ஹக், "தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அவர் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். அவர் மைதானத்தில் ஓய்வை அறிவித்திருந்தால்தான் சரியாக இருந்திருக்கும். இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நபர் வீட்டில் அமர்ந்து ஓய்வை அறிவிப்பது சரியான முடிவல்ல. சச்சின் ஓய்வு முடிவினை அறிவிக்க இருக்கும் போதும் அவரிடம் இது குறித்து கூறியுள்ளேன். எனவே தோனியும் அவ்வாறு செய்திருந்தால் நான் உட்பட அனைவரும் மிகவும் சந்தோசப்பட்டிருப்போம். இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான்" என்றார்.