இந்திய கிரிக்கெட் அணி ஏழு ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற கே.எல்.ராகுல் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். 70 பந்துகளில் 73 ரன்களை அடித்தார். அதன் பின் ஹூசைன் பந்து வீச்சில் ராகுல் ஆட்டம் இழந்தார். அவருக்கு பின் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்ட இந்திய அணி 41 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய வங்கதேச அணியில் ஷாகிப் 5 விக்கெட்களையும் ஹூசைன் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
187 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்களை எடுத்து வெளியேறினார். பின் வந்த வீரர்கள் குறைவான அளவே ரன்களை எடுத்தாலும் வங்கதேச அணி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. விக்கெட்கள் ஒருபுறம் சரிய 8 ஆவது விக்கெட்டாக களமிறங்கிய மிஹைடி ஹாசன் பொறுமையாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி சார்பில் சிராஜ் 3 விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்களையும் சாஹர் மற்றும் ஷர்துல் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.
வங்கதேச அணி 46 ஆவது ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.