Skip to main content

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு??? விளக்கம் அளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்....

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

anderson

 

 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் தற்போது இல்லை என ஓய்வு குறித்து பரவிய தகவலுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.

 

ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர். தன்னுடைய துல்லியமான பந்துவீச்சினால் பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். குறிப்பாக வேகப்பந்துவீச்சிற்கு உகந்த மைதானங்களில் இவர் பந்து வீச்சை எதிர் கொள்வதற்கு பல பேட்ஸ்மேன்கள் சிரமப்படுபவர். சமீப காலமாக அவரது பந்துவீச்சு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என அந்நாட்டில் விமர்சிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என ஒரு தகவல் பரவியது. தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

தன்னுடைய ஓய்வு குறித்து பரவிய தகவல் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும்போது, "அந்த தகவலில் துளியும் உண்மை இல்லை. என்னால் எவ்வளவு காலத்திற்கு விளையாட முடியுமோ அது வரை விளையாடுவேன். இந்த வாரம் சிறப்பாக பந்து வீசவில்லை. இந்த வாரம் எனக்கான வாரமாக அமையவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக உணர்ச்சி வசப்பட்டேன். கடந்த போட்டிகளில் செய்த தவறை சரி செய்து விட்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்" என்றார்.

 

முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்காவது இடத்தில் உள்ளார். தற்போது 590 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஆண்டர்சன் இன்னும் 10 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் பெற்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

"பேட்டிங்கில் சச்சினைப் போல பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்டர்சன்..." கிளைன் மெக்ராத் புகழாரம்!!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020

 

Glenn mcgrath

 

இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி அதன் மூலம் இச்சாதனையைப் படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவருக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த வீரர்களும், சமகாலத்து வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான கிளைன் மெக்ராத் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், ஆண்டர்சன் சச்சினைப் போல ஒரு சாதனை எல்லையை அடைந்துள்ளார். சச்சின் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையையும், அவர் டெஸ்ட் போட்டிகளில் குவித்த ரன்களையும் யாராலும் நெருங்க முடியாது. அது போல ஒரு சாதனையைத்தான் ஆண்டர்சன் பவுலிங்கில் செய்துள்ளார். அவரைப் போல பந்துகளை இரண்டு வகையிலும் யாராலும் சுழலச் செய்ய முடியாது. ஆண்டர்சனிடம் உள்ள திறமையைப் போல என்னிடம் இல்லை" என்றார்.

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கிளைன் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

 

 

Next Story

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் உலக சாதனை படைத்தார்...!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

anderson

 

 

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

 

38 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆவார். வேகப்பந்துவீச்சுக்கு உகந்த மைதானங்களில் அவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் பலர் தங்களது நடு ஸ்டம்புகளைப் பறிகொடுத்துள்ளனர். எதிரணியினரின் விக்கெட்டை வீழ்த்திய பின் அவரது கொண்டாட்டமும், ஆர்ப்பரிப்பும் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படும். இவர் 2003ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் இச்சாதனையை படைத்துள்ளார்.இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் உள்ள முத்தையா முரளிதரன், ஷேன்வார்னே, அனில்கும்ப்ளே என அனைவரும் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த சில போட்டிகளில் ஆண்டர்சனின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று அனைவரும் கூறிவந்த நிலையில் ஆண்டர்சன் இச்சாதனையை படைத்து, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.