கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மார்ச் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 13 ஆவது ஐ.பி.எல். தொடர் கரோனா எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரை இந்த ஆண்டே நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பி.சி.சி.ஐ. எடுத்துவருவதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது குறித்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டியை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க வேண்டும் எனச் சமீபத்தில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். எனவே, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக பி.சி.சி.ஐ விரைவில் முடிவு எடுக்கும்.
ஐ.பி.எல். போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4,000 கோடி இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், அப்படி நடைபெற்றால் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் ஏற்கனவே கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.