Skip to main content

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது -அஷ்வின்

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

Ashwin

 

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அஷ்வின் நடப்பு தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த தொடரின் போதே அஷ்வின் பேட்ஸ்மேனை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

 

கிரிக்கெட் விதிப்படி இது சரியென்று ஒரு தரப்பு முன்வைத்தாலும், மற்றொரு தரப்பு கிரிக்கெட் மாதிரியான ஜென்டில்மேன் விளையாட்டில், இது விக்கெட் வீழ்த்துவதற்கான சரியான அணுகுமுறை இல்லை என்று கூறியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது பெங்களூரு அணி வீரர் ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை மன்கட் முறையில் வீழ்த்த அஷ்வின் முயற்சித்தார். பின் விக்கெட்டை வீழ்த்தாமல் இறுதி எச்சரிக்கை மட்டும் கொடுத்தார். தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்த அஷ்வின், 'இது இறுதி எச்சரிக்கை. பின் என்னை குறை கூறாதீர்கள்' எனப் பதிவிட்டார்.

 

அஷ்வின் பங்கெடுத்த ஒரு விவாதத்தில் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஷ்வின், "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஒரு காவலாளி போல இருந்து இதை நான் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியாது" எனக் கூறினார்.