Skip to main content

மன அழுத்தம் ஏற்படுகிறதா? என்ன செய்ய வேண்டும்? - மனநல மருத்துவரின் விளக்கம்

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

Getting stressed? What to do?- Psychiatrist's explanation!

 

'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மனநல மருத்துவர் நப்பின்னை நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மனநலம் எல்லோருக்கும் அவசியம். இந்த உலகத்திலேயே அதுதான் முதன்மை. இன்றைய சூழலில் நாம் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஆனால், மனநலத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை; அதைப் பற்றி மனம் விட்டு பேசுவதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் மனநலம் என்பது இரண்டு கண்கள் மாதிரி. கண்கள் இருந்தால் தான், இந்த உலகத்தில் இருக்கக் கூடிய நல்ல விசயங்களைப் பார்க்க முடியும். நிறைய விசயங்கள் குறித்து தெரிந்துகொள்ள முடியும். 

 

கண் பார்வையற்றவர்கள் தங்களுடைய விரல்கள் மூலமாக, இந்த உலகத்தை தெரிந்து கொள்கிறார்கள். அப்போது, நாம் இந்த கண்களை வைத்துக்கொண்டு, இந்த உலகத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பது எப்போது என்றால் நமது மனநலம் பாதிக்கப்படும் போதுதான். நமது மனநலத்தைப் பேணுவது மிக முக்கியம். எனவே, எதெல்லாம் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக நமக்கும், மேல் அதிகாரிக்கும் கருத்து மோதல் இருக்கலாம். அந்த சூழ்நிலையை கொஞ்சம் தவிர்க்கலாம். தவிர்த்த பிறகும் முடியவில்லை என்று கூறினால் அந்த சூழ்நிலையை கொஞ்சம் மாற்றிப் பார்க்க வேண்டும். 

 

அதில் முக்கியமான விசயம் என்னவென்றால், நேரம் தவறாமையைக் கடைபிடிக்கலாம். மேலும், எதுவெல்லாம் நம்மால் சமாளிக்க முடியும், எதுவெல்லாம் சமாளிக்க முடியாது போன்றவற்றைத் தெரிந்து கொண்டால், பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம். இதைத் தாண்டி நிறைய நல்ல விசயங்கள் இருக்கிறது. நண்பர்களுடன் பேச வேண்டும். மதுப் பழக்கத்தை விட வேண்டும். சிகரெட் பிடிப்பதை விட வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

 

நமக்குப் பிடித்தமானவர்களுடன் மனம்விட்டு பேச வேண்டும். நமது மூச்சில் மட்டுமே கவனம் செலுத்தி, சுமார் 10 நிமிடங்கள் மெடிடேஷன் செய்யலாம். ஸ்கிப்பிங், சைக்கிளிங் நாள்தோறும் செய்யுங்கள். இந்த மாதிரியான சின்ன சின்ன விசயங்கள் செய்யும்போது நமது மனசு லேசாவதற்கான வாய்ப்பு உள்ளது. மனநலம் யாரை பாதிக்கும்? யாரை பாதிக்காது? என்றால் அனைவரையும் பாதிக்கும். எல்லோருக்கும் கவுன்சிலிங் தேவை. வயதானவர்களுக்கு மட்டுமின்றி நமக்கும் மறதிநோய் வர ஆரம்பிக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு மறதிநோய் இருந்தால் அவர்களுக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் அவர்களைப் பராமரித்துக் கொள்பவர்களுக்குத்தான் ரொம்ப சோர்வாக இருக்கும். எனவே, மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மன நலம் என்பது மிக முக்கியம்" எனத் தெரிவித்துள்ளார்.