Published on 05/01/2025 | Edited on 05/01/2025
அடுத்து வரும் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். பொதுவாக காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும்.
ஜனவரி 11-ம் தேதி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.