சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மூன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேடையில் பேசிய தமிழக முதல்வர், ''ஆரியமும் சமஸ்கிருதமும் தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனை வரலாறு கூறினர். சிந்துவெளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். சிந்துவெளி குறியீடுகளும் தமிழக அகழாய்வு குறியீடுகளும் அறுபது சதவீதம் ஒத்துப் போகின்றன. கீழடியை போன்று பெருநை அருங்காட்சியகம் தொடர்பாக எட்டு இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. நமக்கான அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டும்.
ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிந்துவெளி புதிருக்கான உரிய விடையைக் கண்டுபிடித்து சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகையை எடுக்கும்படி வெளிக்கொண்டுவரும் நபர்கள் மற்றும் அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்ற முதல் முத்தான அறிவிப்பை வெளியிடுகிறேன். சிந்துவெளி பண்பாடு குறித்த ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி நிலையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களுக்கு ஐராவதம் மகாதேவன் பெயரில் ஒரு ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு.
தமிழ் பண்பாட்டின் தொன்மையை உலகே தெரிந்து கொள்ள வேண்டும் என ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி கல்வெட்டு ஆய்வாளர்கள் ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் இது மூன்றாவது அறிவிப்பு. இந்த மூன்று அறிவிப்புகளும் இந்த துறையின் ஆய்வுகளுக்கு வேகத்தை ஊக்கத்தையும் கொடுக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மாணவிகள் பலரும் வந்திருந்த நிலையில் முதல்வர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக அவர்களிடம் இருந்து கருப்பு துப்பட்டாக்கள் வாங்கி வைக்கப்பட்டு பின்னர் மாணவிகள் அனுமதிக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாணவிகளிடம் துப்பட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.