Skip to main content

நிலவைத் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங், நாப்கினைத் தொட்டது நான்! - பேட்மேன் முருகானந்தம்

Published on 11/02/2018 | Edited on 12/02/2018

‘’கடலில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் சண்டையிட்டு ரத்தம் சிந்தி கடலின் நீல நிறத்தையே மாற்ற நினைக்கும். ஆனால் கடல் எப்போதும் அதன் நீல நிறத்திலேயே இருக்கும் . அது போலத்தான் நானும்.  எப்போதும் நிறம் மாறாத கடல் நான்", என்று கோவை பாப்பநாயக்கன் புதூரைச் சேர்ந்த 'நாப்கின்' முருகானந்தம் மூன்று வருடங்களுக்கு முன்னால் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டியளித்திருந்தார். அதற்கு முன்பே நக்கீரனில் 'ஒரு நாப்கின் புரட்சி – அமெரிக்காவுக்கு சவால் விடும் தமிழன்' என நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு கட்டுரையின் மூலம் முருகானந்தத்தைக் கொண்டாடிய பின்னரே தமிழ்நாடு அவரை கொண்டாடி மகிழ்ந்தது . 
 

ஏகப்பட்ட விருதுகளும், மாலைகளும், மனிதர்களும் அதிக அளவில் சேர்ந்த போதும் அப்போது சொல்லியதைப் போலவே முருகானந்தம் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கையால் 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டபோது இருந்த அதே முருகானந்தம் தான்  இப்போது பாலிவுட்டையும்  கலக்கவிருக்கிறார். உலகெங்கும்  'தி பேட் மேன்' என்கிற பெயரில்  முருகானந்தத்தின் வாழ்க்கை  திரையில் ஓடிக்கொன்டிருகிறது.

 

padman 1ஆம். முருகானந்தத்தின் வாழ்க்கையைப் படமாய் கொண்டு வர வேண்டும் என்று  ‘பா’ பட புகழ் இயக்குனர் பால்கி விரும்ப, முருகானந்தமாய் நடிக்க ஆர்வம் கொண்டு முன் வந்து நின்றார் இந்தி நட்சத்திரங்களில்  முக்கிய நடிகரான  அக்சய் குமார் . 


முருகானந்தத்தின் மனைவி 'சாந்தி' கேரக்டரில் 'கபாலி' ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். கௌரவ நடிகராக அமிதாப்பச்சன் நடிக்க சோனம் கபூர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  நடிகை ட்விங்கிள் கன்னா தயாரித்திருக்கிறார் .
 

ஒரு ‘’நாப்கின் புரட்சி’’ கட்டுரையில் முருகானந்தம் சொல்லிய தகவல்களை வாசகர்கள் நினைவூட்டிக் கொள்ள சுருக்கமாய்...
 

"எனது அப்பா அருணாச்சலம் விபத்தொன்றில் காலமான  பின்னால் எனது பள்ளி படிப்பு ஒன்பதாம் வகுப்போடு முற்று பெற்றது. படிப்பறிவில்லாத என் அம்மாவின் பண்ணைக் கூலி வருமானம் மூலம் எதையும் செய்ய முடியாத நிலையில் கூட தங்கச்சி வேறு இருப்பதால் நான் ஒர்க் ஷாப் தொழிலாளியாக வேலை செய்ய நேர்ந்தது. திருமணத்திற்கு பின் ஒரு நாள் எனது மனைவி  சாந்தி  எதையோ மறைத்து வைத்தபடி வீட்டு கொல்லைப் பக்கம் போனாள். பின்னாலயே சென்ற நான், 'என்ன மறைத்துக் கொண்டு போகிறாய்?' என்று  கேட்ட போது அவள், 'இது பொம்பளைங்க சமாச்சாரம். உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க' என்று தவிர்த்தாள். நான் அவளது கையிலிருந்ததை வாங்கிப் பார்க்க, என் சைக்கிள் துடைக்க வைத்திருக்கும் துணியும் பேப்பருமிருந்தன.

 

padman 2


  
'மாதவிடாய்க் காலங்களில் இதைத்தான் உபயோகப்படுத்தறீங்களா? ஏன் அதுதான் டிவியில நாப்கின்னு  சொல்லி காட்றானே? அதை வாங்கிக்க வேண்டியதுதானே'னு  சொன்னதுக்கு, 'அதை வாங்குனா நம்ம வீட்ல பால் வாங்க பணம் இருக்காது' என்றாள். பாலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்து கடைக்குப்  போய் நாப்கின் கேட்ட போது, ஏதோ நான் ஆணுறைக் கேட்டதைப் போல  ரகசியமாய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு பேப்பரில் சுற்றிக் கொடுத்தான் அந்தக் கடைக்காரன் . வாங்கிய  அந்த நாப்கின் பண்டல் அதிக விலையாக இருந்தது .

 
அந்த நாப்கினில் அப்படி என்னதான் இருக்கிறது என்று  நான் நாப்கினைத் தொட்டுப் பார்த்த போது பஞ்சுகளால் அமுக்கப் பட்டிருந்தது. அட, பத்து பைசா பெறுமானமுள்ள இந்த பஞ்சுக்காகவா இவ்வளவு விலை? கோயமுத்தூர்ன்னாலே பஞ்சு தானேன்னு ஒரு மில்லுலயிருந்து வாங்குன பஞ்சை அமுக்கி அதே மாதிரி செய்து என் மனைவியிடம் கொடுத்தேன். 'உங்களுக்கு வேற வேலையில்லையா?' என்றவளை சமாதானம் செய்து, 'யூஸ் பண்ணிட்டு ரிசல்ட் சொல்லு'ன்னு சொன்னேன். பரீட்சை எழுதி விட்டு ரிசல்ட்டுக்காய் காத்திருந்த மாணவனைப் போல நின்றிருந்த என்னிடம், என் மனைவி 'இதுக்கு துணியே பரவாயில்லை'ன்னு  சொல்லிட்டு மூஞ்சியில வீசிட்டுப் போயிட்டா. அப்புறம் என் தங்கச்சிகிட்ட மீண்டும் நான் வேறொரு மில்லோட பஞ்சை அமுக்கிக் கொடுத்த போது, 'அண்ணா, என்னன்னா நீ'ன்னு ஓடிப் போனாள்.  அப்புறம் நானே இதை யூஸ் பண்ணிப் பார்த்தேன். சீட்டிலமர்ந்து என் சைக்கிளை  நான் அழுத்திக் கொண்டு போன போது சிறு நீர் வெளியே வந்து தோற்றுப் போனேன். இதையே நாம கண்டு பிடித்தே ஆகோணும்  என்று வேட்கை கண்டேன் . 
 

என் வீட்டிலிருக்கும் பெண்கள் என் ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் போனதால் மெடிக்கல் காலேஜ் பெண்களிடம் கொடுத்து செக் செய்தேன் . அவர்களும் என்னை ஏமாற்ற, அவர்களிடம் யூஸ் பண்ணியதும் வீசாமல் இந்தக் கூடையில் போட்டு விடுங்கள் என்றேன். அப்படி அவர்கள் யூஸ் பண்ணிய நாப்கின்களை ஒரு மூட்டையில் கட்டி வீட்டுக்குக் கொண்டு வந்து அவற்றை மேசையில் பரப்பி, ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது கதைவைத் திறந்த என் மனைவி நொறுங்கிப் போனாள். வீட்டை வீட்டு வெளியேறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினாள். அம்மாவும் ,தங்கச்சியும் என்னை விட்டு விலகிப் போனார்கள். பைத்தியக்காரன் என்று இதே பாப்ப நாயக்கன் புதூர் மக்கள் என்னை விரட்டியடித்தார்கள். ஆனால் முயற்சியைத் தளரவிடாத நான், அந்த பஞ்சு பைன் மரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெசினை நானே கண்டறிந்து உலகெங்கும் கிராமப் புறங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு கொண்டு போனேன். அவர்களையே நாப்கின்கள் உருவாக்கச் செய்து அவர்களை முதலாளிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்" 
 

இப்படி பெண்களின் மறைக்கப் பட்ட உடல் நிலை, கண்டறிவதில் ஏமாற்றம், மனைவியின் விவாகரத்து நோட்டீஸ், உறவுகளே ஒதுக்கிய கொடுமை , ஊராரின் 'பைத்தியக்காரன்' அடையாளம், ஊர் விட்டு விரட்டியடித்தல், தனிமையின் துயரம் என பல்வேறு வலிகளைத் தாண்டி தற்போது உச்ச நிலை அடைந்திருக்கும் அந்த முருகானந்தம் தான் அச்சு அசலாய் இப்போது 'பேட் மேன்' என்று  திரையில் தெரியவிருக்கிறார் . 
 

நாம் அழைத்தபோது கனடாவில் இருந்த அவர், நக்கீரன் என்றதுமே பிரியமாய் நம்மிடம் பேசினார். 
 

"என் வாழ்க்கையை படம் பிடிக்கும் அளவுக்கு நான் வளர்வதற்கு, என் குரல்  ஓங்கி ஒலித்ததற்கு நக்கீரன் ஒரு முக்கியக் காரணம். அதற்காக நக்கீரனுக்கு என்றென்றும் நன்றி கொண்டவனாகவே இருக்கிறேன். நான் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளை உற்று கவனித்து வந்திருக்கிறார் பிரபல இயக்குனர் பால்கி. என் சொல்லாடல்கள் அவரை ஈரமாய் இழுத்திருக்கின்றன. அவர் என்னிடம் 'உங்கள் கதையை நான் படம் செய்வதாக இருக்கிறேன். உங்கள் அனுமதி வேண்டும்' என்றார். என் பாத்திரத்தில் நடிக்க அக்சய்குமார் தயாராயிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். என் கதை என்பதை விட இது சமூகத்திற்கு நல்லவொரு முயற்சியைப் பற்றிக் கூறி, பெண்களுக்கு விழிப்புணர்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். வாழ்த்துகள் பால்கி சார் என்றேன்.

 

padman 3அடுத்தடுத்த நாட்கள் அதிவேகமாய் கரைந்து போயின. அக்சய்குமார் என்னை சந்தித்து ஆரத் தழுவிக் கொண்டார். முருகானந்தம் என்கிற கதாபாத்திரமாகவே மாறுவதற்கு அவர் பல்வேறு பிரயத்தனம் செய்ததை நான் கூடவேயிருந்து பார்த்து பிரமித்துப் போனேன்.‘’நிலவை முதன் முதலாய் தொட்ட ஆர்ம்ஸ்ட்ராங் போல பெண்களின் நாப்கின் உறையைத்  தொட்ட முதல் ஆண் நானாகத்தானிருப்பேன்.’’என நான் சொன்னதை பால்கியும், அக்சய்குமாரும் ரொம்பவே ரசித்தார்கள். என் மனைவி சாந்தி கேரக்டரை நடிகை ராதிகா ஆப்தே செய்யும் போது..என் மனைவி சாந்தி எப்படியெல்லாம் என்னிடம் நடந்து கொண்டாள் என்பதை அறிய வேண்டும் என்றார்கள். அதனால் என் மனைவி சாந்தியை கூட்டி வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்து காட்டச் சொன்னார்கள். ஒரு நிஜ வாழ்க்கைக் கதையை எந்த வித முகச் சுருக்கமுமின்றி, நெளிவுமின்றி ஒரு திரைப்பட ரசிகன் ரசிக்க வேண்டுமென்பதற்காக இயக்குனர் பால்கி, அக்சய்குமார் ஆகியோர் உள்ள அணியினர் ரொம்பவுமே மெனக்கெட்டதைப் பார்த்தேன்.

    
அக்சய்குமார் ஒரு நல்ல நண்பர். அவர் இந்த 'பேட்மேன்' படத்திற்கான எல்லா மேடைகளிலும், இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஓன்று நான், ஐ ஏம் ரீல் ஹீரோ. இரண்டாவது இவர், ஹீ இஸ் த ரியல் ஹீரோ என அவர் என்னை பெருமையாய்ச் சொன்னார். அதற்கு அவருக்கு என் அன்புகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். மற்றபடி என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் அடித்தட்டு மக்களுக்கு என் குறைந்த விலை நாப்கின் மெசின்களைக் கொண்டு போய்விட்டேன். இது தொடரும். தொடர்வதற்கு நல் உள்ளங்களின் ஆதரவு தேவைப்படுகின்றது"  என்கிறார் 'தி ரியல் பேட்மேன்' முருகானந்தம்.
 

நிஜ வாழ்க்கையில் ஜெயித்த முருகானந்தத்திற்கு திரைப்படம் என்னும் நிழல் திரை பெரிதொன்றுமல்ல. பேட்மேன் முருகானந்தம் என்றும் நிறம் மாறாத கடல் தான் .

Next Story

இந்தியாவிற்கு பதில் ‘பாரதம்’ - ஒரு அடி மேலே பாய்ந்த அக்ஷய் குமார்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

india bharat issue akshay kumar changed his movie title

 

பாலிவுட்டில் அக்ஷய் குமார் தற்போது சுரேஷ் தேசாய் இயக்கத்தில் பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. 1989 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ராணிகஞ்ச் நிலக்கரி வயல் இடிந்து விழுந்ததில் 64 சுரங்கத் தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை சுரங்கப் பொறியாளர் ஜஸ்வந்த் சிங் தனது உயிரைப் பணயம் வைத்து சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றியிருந்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. 

 

இப்படத்திற்கு முதலில் 'காப்ஸ்யூல் கில்' (Capsule Gill) என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்பு 'தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' (The Great Indian Rescue) என மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தலைப்பு மாற்றப்பட்டள்ளது. 'மிஷன் ராணிகஞ்ச்; தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' என வைக்கப்பட்டுள்ளது. இதனை அக்ஷய் குமார் அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து படத்தின் டீசர் நாளை (07.09.2023) வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 6 அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என பகிர்ந்துள்ளார். 

 

கடந்த சில நாட்களாக, பாஜக அரசு வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும் இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதில் பாரதம் என்று அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக  மத்திய அமைச்சர் அனுராக் “இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது.இதற்கு முன்பு பாரத் சர்க்கார் என்று அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே" என முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்கள் அமிதாப்பச்சன், கங்கனா ரணாவத் பாரதம் என்பதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அவர்களை விட ஒரு படி மேலே போய் அக்ஷய் குமார் தனது படத்தின் தலைப்பில் இந்தியா என்ற சொல்லிற்கு பதில் பாரதம் என மாற்றியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் திரைப்படங்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்து பாஜக தலைவர்கள் தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என பிரதமர் மோடி அவரது கட்சி நிர்வாகிகளை எச்சரித்திருந்ததாக கூறப்பட்டது. அவரது கருத்தை அக்ஷய் குமார் ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


 

Next Story

"யாரும் நினைக்காத அளவுக்கு தண்டனை கொடுக்கணும்" - மணிப்பூர் சம்பவம் குறித்து அக்ஷய் குமார்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

akshay kumar about manipur issue

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

 

அதனை எதிர்த்து பழங்குடியினப் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 

இதனிடையே கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் கொலை கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

 

இதே போல் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரிதேஷ், "பெண்ணின் கண்ணியம் மீதான தாக்குதல் மனித இனத்தின் மீதான தாக்குதல், "பெண்ணின் கண்ணியம் மீதான தாக்குதல் மனித இனத்தின் மீதான தாக்குதல்" என குறிப்பிட்டு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.