ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன், பூஜைகளில் பூக்களை பயன்படுத்துவதற்கான காரணத்தைப் பற்றி நம்மோடு பகிர்ந்துள்ளார்.
பூஜைகளில் மலர்களைப் பயன்படுத்துவதற்கு காரணம் கோரிக்கைகளை கடவுளிடம் சொல்வதுதான். வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது அந்தந்த வேலைகளுக்கு ஏற்ப மனு படிவங்கள் மாறும். அதே போல் பூஜைக்கான காரணத்திற்கு தகுந்தாற்போல் மலர்களை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. நீங்கள் எதிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால் தாமரை மலரால் பூஜை செய்ய வேண்டும். அதிகமான செல்வப்பெருக்கு வேண்டும் என்றால் அல்லி மலரை வைத்து பூஜை செய்ய வேண்டும். தேவதைகளை வசியம் செய்யும் அவர்களிடமிருந்து அருளைப் பெற்றுக்கொள்ள மனோரஞ்சிதம் மலரைப் பயன்படுத்தி பூஜை செய்ய வேண்டும். காரணம் மனோரஞ்சிதம் மலருக்கு தேவதைகளை ஈர்க்கும் வலிமை இருக்கிறது.
நீங்கள் எதிரிகளை வெற்றிகொள்ள சங்கு புஷ்பம் மலரைப் பயன்படுத்த வேண்டும். சங்கு புஷ்பத்திற்கு அபராஜிதா என்ற பெயர் உள்ளது. அதற்கு எதிரிகளை வெற்றி கொள்வது என அர்த்தம். சங்கு புஷ்பத்தை வைத்து நீங்கள் பூஜை செய்யும்போது உங்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். கணவர், மனைவி இடையே பிரச்சனை இருந்தால் மல்லிகைப் பூவை வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இப்படி நான் சொன்ன மலர்களை வைத்து பூஜை செய்யும்போது உங்களுடைய கோரிக்கையும் அன்பும் வெளிப்படும்.
மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடையேயான தொடர்பு வாசனையால் தான் உருவாகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாசனை உண்டு. அதை ஜோதிடர்கள் ஜென்ம வாசனை என்று குறிப்பிடுவார்கள். இந்த வாசனையை வைத்துத்தான் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நாய்கள் மோப்பமிட்டு கண்டறிகிறது. மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பிரதான தொடர்பாக வாசனை இருப்பதால்தான் மலர்களை வைத்து பூஜை செய்து கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். துர்கை அம்மனுக்கு அரளி மலரை வைத்து பூஜை செய்வதன் மூலம் எல்லாவித நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். தோஷங்களைத் தீர்க்கக் கூடிய சக்தி அரளி மலருக்கு உள்ளது. கல்வியில் முன்னேற்றம் வேண்டுமென்றால் நந்தியாவட்டை மலரைப் பயன்படுத்தி பூஜை செய்ய வேண்டும். ரோஜா பூவை வைத்து பூஜை செய்தால் மகிழ்ச்சி உண்டாகும். முல்லை மலரைக்கொண்டு பூஜை செய்தால் இசை, நாட்டியம், ஓவியம் போன்ற அனைத்துவிதமான கலைகளும் உங்கள் வசமாகும்.
அம்மனுக்கு தாளம் பூ பூஜை செய்வதால் எல்லாவித செல்வமும் உங்களுக்கு கிடைக்கும். கன்னி பெண்கள் திருமணத்திற்கு மார்கழி மாதம் கோலத்தின் நடுவில் பூசனி பூவை வைப்பார்கள். அதற்குக் காரணம் ஆண்டால் மார்கழி மாதம் திருப்பாவை பாடி கிருஷ்ணரைக் கூடினார். அதனால் அந்த நேரத்தில் பூசனி பூ வை கோலத்தில் வைத்து பூஜை செய்யும் கன்னி பெண்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். இப்படி ஒவ்வொரு கோரிக்கைக்கும் ஒவ்வொரு மலரைத் தேர்ந்தெடுத்து பூஜை செய்ய வேண்டும். பெரும்பாலான வெண்மை நிற பூக்கள் வைத்து பூஜை செய்வது கல்விக்கும், கலைக்கும் உகந்தது. சிவந்த மலர்கள் அதிகாரம், ஆட்சி, செல்வத்திற்கு உகந்தது. மஞ்சள் நிற மலர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க காரணமாக அமைகிறது. வண்ணங்களும் வாசங்களும் எந்த கடவுளுக்கு உகந்தது என்பதைப் பார்த்து நீங்கள் பூஜை செய்வதன் மூலம் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்றார்.