Skip to main content

உலகசாதனை படைத்த மின்னல்!! அதிசயித்த விஞ்ஞானிகள்... எத்தனை கிலோமீட்டர் நீளம் தெரியுமா..?

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

world longest lightning bolt for 700 km

 

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மின்னல் ஒன்று 700 கிலோமீட்டர் நீளம் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலக வானிலை அமைப்பு (WMO) நிபுணர்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவில் முறையே மிக நீளமான மற்றும் நீண்ட நேரம் தோன்றிய மின்னல்கள் கண்டறியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"கடந்த மார்ச் 4, 2019 அன்று வடக்கு அர்ஜெண்டினாவில் தோன்றிய மின்னல் ஒன்று 16.73 வினாடிகள் நீடித்தது. இதுவே  மின்னல் நீண்ட நேரம் வானில் தோன்றியதற்கான உலகசாதனை ஆகும். அதேபோல கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று தெற்கு பிரேசிலில் 700 கிலோமீட்டர் (400 மைல்) நீளத்திற்கு ஒரு மின்னல் தோன்றியது. இதுவே இதுவரை உலகில் பதிவான மிக நீளமான மின்னலாகும்" என WMO அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதற்கு முன் ஜூன் 2007 இல் அமெரிக்க மாநிலமான ஓக்லஹோமாவில் 321 கிமீ (199.5 மைல்) நீளத்திற்குத் தோன்றியதே இதுவரையில் உலகின் மிகநீளமான மின்னலாகக் கருதப்பட்டு வந்த நிலையில், உலக வானிலை அமைப்பின் அறிக்கையின் மூலம் இந்த சாதனை முறியடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஆகஸ்ட் 2012 -ல் தெற்கு பிரான்சில் 7.74 வினாடிகள் நீடித்த மின்னலே, இதுவரை நீண்ட நேரம் வானில் தோன்றிய மின்னலாக இருந்த நிலையில், இந்த சாதனையும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. முந்தைய சாதனைகளை விட இருமடங்கான இந்த புதிய மின்னல்களின் சாதனை விஞ்ஞானிகளையே அதிசயிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்