ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்தநிலையில் உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகளை அழித்துள்ளதாகவும், 3500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடல் பகுதியில் இருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை வீசி தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே அதிபர் மாளிகையின் முன்னின்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர், தான் ஆயுதங்களை கீழே போடுமாறு உக்ரைன் ராணுவத்திடம் கூறியதாக வதந்தி பரவி வருவதாகவும், நாங்கள் ஆயுதங்களை கீழே போடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “நாங்கள் நாட்டை பாதுகாப்போம். ஏனெனில் உண்மையே எங்கள் ஆயுதங்கள்” எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.