2008 நிதி நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் தாக்கத்தை விட, உலக பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடையலாம் என்று ஆய்வறிக்கை ஒன்றை கூறுகிறது.
சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உலகளாவிய பொருளாதாரத்தின் நிலை குறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘குறைக்கப்பட்ட வர்த்தகம், எல்லை தாண்டிய மூலதன ஓட்டங்கள் மற்றும் இழந்த பொருளாதார செயல்திறன் காரணமாக, உலகப் பொருளாதாரத்திற்கு 0.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதல் 5.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் வரை இழப்பு ஏற்படக்கூடும். இது உலகளாவிய பணவீக்கத்தை 5 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்.
இதனால், உலக பொருளாதாரம் கொரோனா தொற்றுநோய் மற்றும் 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை விடை மிக மோசமான வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது. உலகப் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைப்பாட்டை, கொள்கை வகுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கொள்கை ரீதியான அணுகுமுறையுடன், கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பொருத்தமான கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதனால் வாழ்க்கைச் செலவு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி போன்ற துறைகளில் எதிர்பாராத விளைவுகளைத் தணிக்க முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.