Skip to main content

"ஆப்கானில் ஜனநாயக ஆட்சி இல்லை" - தலிபான்கள் !

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

taliban

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தநிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்குப் பேட்டியளித்த தலிபான் அமைப்பின் உறுப்பினரான வஹீதுல்லா ஹாஷிமி, ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமையாது என தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் புதிய அதிபர் குறித்தும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் குறித்துப் பேசியுள்ள வஹீதுல்லா ஹாஷிமி, “தலிபான் இயக்கத்தின் துணைத் தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் அதிபர் பதவியை வகிக்கலாம். அந்த அதிபருக்கு மேலாக தலிபான் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா இருப்பார்” என தெரிவித்துள்ளார்.

 

மேலும் வஹீதுல்லா ஹாஷிமி, ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடைபெறாது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ஜனநாயக முறைக்கு எந்த வழியும் இல்லை. ஏனெனில் ஜனநாயக முறைக்கான எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இங்கு இல்லை. என்ன விதமான அரசியல்முறையை ஆப்கானிஸ்தானில் அமல்படுத்தலாம் என்றெல்லாம் நாங்கள் ஆலோசிக்க மாட்டோம். ஏனென்றால் எங்களுக்கு ஷரியத் சட்டம் இருக்கிறது" என கூறியுள்ளார்.

 

தொடர்ந்து வஹீதுல்லா ஹாஷிமி, "எங்களின் சொந்தப் படை வீரர்களையும், அரசின் படை வீரர்களையும் இணைத்து புதிய ராணுவத்தை அமைக்க இருக்கிறோம். அரசின் வீரர்கள் பெரும்பாலும் துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்தில் பயிற்சி எடுத்தவர்கள். எனவே அவர்களிடம் பேசி மீண்டும் பணிக்கு வரக் கூறுவோம். ராணுவத்தில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்வோம். இருப்பினும் அரசு படை வீரர்கள் எங்களுக்குத் தேவை. எனவே அவர்களை எங்களோடு இணைய அழைப்பு விடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் தங்களிடம் பைலட்கள் இல்லாததால், பல பைலட்களைத் தொடர்புகொண்டு தங்களோடு இணையுமாறு அழைத்துவருவதாகவும், மேலும் பலரை அழைக்க அவர்களின் தொலைபேசி எண்களைத் தேடிவருவதாகவும் வஹீதுல்லா ஹாஷிமி கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்