கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள், அங்கு தங்களது இடைக்கால அரசை நிறுவியுள்ளன. இருப்பினும் இதுவரை எந்த உலக நாடும் தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை. இந்தநிலையில், தங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என தலிபான்கள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜபியுல்லா முஜாஹித், "ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த அச்சுறுத்தலும் வராமல் இருக்க உலகம் தலிபான்களை அங்கீகரிக்க வேண்டும். ஒரு பொறுப்பான தரப்பாக நாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் வரை, உலக நாடுகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதற்கு தலிபான் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. எங்களை அங்கீகரிப்பது இருதரப்பு தேவை" என கூறியுள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் அமெரிக்கா எங்களை அங்கீகரிக்காததால் அவர்களை எதிர்த்து சண்டையிட்டோம். எங்களை அங்கீகரிக்காவிட்டால் அது ஆப்கானிஸ்தானிலும், இந்த பிராந்தியத்திலும், உலகிலும் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும்" என கூறியுள்ள ஜபியுல்லா முஜாஹித், தலிபான்கள் தங்கள் அங்கீகாரத்திற்கான அனைத்து முன் நிபந்தனைகளையும் செய்து முடித்துவிட்டனர் எனவும் உலகம் எங்களை ஒரு வழியில் அல்லது இன்னொரு வழியில் அங்கீகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் தூதரக பணிகளை தொடங்குமாறு உலக நாடுகளுக்கு ஜபியுல்லா முஜாஹித் வேண்டுகோள் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.