இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.
இத்தகைய சூழலில் தான் இலங்கையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் தேதியுடன் (17.11.2024) முடிவு பெறுகிறது. இதனையொட்டி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி (21.09.2024) நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி (15.08.2024) முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.