கொரியக் கடற்பகுதியில் தென்கொரிய அதிகாரி ஒருவர் தவறுதலாகக் கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தென்கொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் உடல் கடலில் எரிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு வடகொரியா அதிபர் கிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது எதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சூழலில், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், அப்பகுதியில் முழு ஊரடங்கு பிறப்பித்தும் உத்தரவிட்டார் அதிபர் கிம் ஜாங் உன். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, பொதுமக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.