விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசியுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்து பல சாதனைகளை படைத்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது இலங்கை அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான கொத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முரளிதரன் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்புவில் நேற்று கொத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் முரளிதரன், "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களை படுகொலை செய்தனர். விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்கு தோன்றியது” என கூறியதாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு முரளிதரன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முத்தையா முரளிதரன் பேசுகையில், தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்துள்ளார்.