Skip to main content

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப்பை நம்பமுடியாது... துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கருத்து!!! 

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

kamala harris

 

 

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப் கூறும் தகவல்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லையென துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

 

கரோனா எனும் கொடிய வைரஸின் தாக்கத்தால் உலகமே கடந்த சில மாதங்களாக முடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இவ்வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியானது இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை இறுதி கட்டத்தை எட்டி விட்டன என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தக் கரோனா வைரஸ் தாக்கமானது பல நாடுகளில் அடுத்த தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என தேர்தல் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இது முக்கியப் பங்காற்றும் என்பதை சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்கள் காட்டுகின்றன. 

 

ட்ரம்ப் தலைமையிலான அரசு கரோனா கட்டுப்படுத்தலில் தோல்வியடைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவில் பரவலாக எழுந்து வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது என்றும் அது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகக்கூட இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. இது ட்ரம்ப் தன் அரசு மீது ஏற்பட்ட களங்கத்தை போக்குவதற்கான முயற்சியென எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அந்த வகையில் தற்போது ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "கரோனா தொற்று நோயின் வீரியத்தை ட்ரம்ப் தலைமையிலான அரசு புரிந்துகொள்ளவில்லை. இதுகுறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி சுகாதார நிபுணர்களை குழப்பிவிட்டார். துறைசார் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நிலைமையை சரியாக புரிந்திருக்க முடியும். இந்தாண்டின் இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என ட்ரம்ப் கூறி வருகிறார். அவர் கூறுவதை நான் நம்பமாட்டேன். ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள் கூறுவதை மட்டுமே ஏற்க முடியும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்