Skip to main content

“அரசியல் லாபத்திற்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது” - கனடா மீது வெளியுறவுத்துறை அமைச்சர் மறைமுக தாக்கு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Foreign Minister's Indirect speech about Canada

 

கனடாவில் உள்ள பயங்கரவாத புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், பயங்கரவாத புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகப் பயங்கரவாத தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதி நிஜார் கொலைக்கு இந்திய உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், கனடா தூதரக அதிகாரியிடம் இந்தியாவை வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. .

 

இந்த நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற 78வது ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (26-09-23) உரையாற்றினார். அதில் அவர், “அரசியல் லாபத்திற்காக ஒரு நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது. சில நாடுகள் தாங்கள் காட்டும் வழிகளில் மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது. வணிகத்துக்காக உணவு மற்றும் எரிபொருள்களை ஏழைகளிடம் இருந்து செல்வந்தர்களுக்கு வழங்கக் கூடாது. கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் தடுப்பூசிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டதை போன்ற அநீதிகள் இனிமேல் நடக்கக் கூடாது. அதே போன்று, அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதம், வன்முறை போன்ற செயல்களை ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரிக்கக் கூடாது” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்