Skip to main content

முக்கிய தலைவர்களுக்கு குறி; துப்பாக்கி தயாரித்த வழக்கில் சிக்கிய வாலிபர்கள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

YOUTUBE SALEM DISTRICT YOUTHS NIA INVESTIGATION

 

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கிகளை தயாரித்ததாகப் பிடிபட்ட வாலிபர்கள், அவர்களுடைய சிவகங்கை கூட்டாளி ஆகியோர் தமிழகத்தில் சில முக்கியத் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் காவல்துறை டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் காவல்துறையினர் புளியம்பட்டி பகுதியில் கடந்த மே 19- ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 

 

அந்த வழியாக இரு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அவர்கள் கொண்டு வந்த பையைச் சோதனை நடத்தியதில் அதில் ஒரு கைத்துப்பாக்கி, அரைகுறையாக செய்து முடிக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கி, முகமூடிகள், கையுறைகள், ஒரு லிட்டர் பெட்ரோல் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

விசாரணையில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி சஞ்சய்பிரகாஷ் (வயது 25), எருமாபாளையம் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (வயது 25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 

 

செட்டிச்சாவடி பகுதியில் அவர்கள் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து வெல்டிங் இயந்திரம், துப்பாக்கி தயாரிப்புக்கான மரக்கட்டைகள், ஏராளமான முகமூடிகள், வீச்சரிவாள், சூரிக்கத்திகள், ரம்பம், அரம் மற்றும் ஈழப்போராளி பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன், தென்னாப்பிரிக்கா நாட்டு போராளி தாமஸ் சங்காரா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலன் என்ற வாலிபரையும் பின்னர் கைது செய்தனர். சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரித்ததால், இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் கோகிலா தலைமையில் காவல்துறையினர், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 

 

அவர்களுக்கு பெரிய அளவில் பின்னணி ஏதும் இல்லை என்பதும், இயற்கையையும் கனிம வளங்களையும் சுரண்டும் நபர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பில் புதிய இயக்கத்தை கட்டமைக்க திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. எனினும், இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. காவல்துறையும் களத்தில் இறங்கியது. என்ஐஏ அதிகாரிகள், கடந்த ஜூலை 27- ஆம் தேதி பூர்வாங்க விசாரணையை தொடங்கினர். 

YOUTUBE SALEM DISTRICT YOUTHS NIA INVESTIGATION

 

நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவரையும் கடந்த ஆகஸ்ட் 7- ஆம் தேதி காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர். அதன்பிறகு இந்த சம்பவத்தில் மேலும் முன்னேற்றம் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர். இந்நிலையில் என்ஐஏ காவல்துறையினர் மீண்டும் வெள்ளிக்கிழமை (அக். 7) செட்டிச்சாவடியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.

 

அவர்கள் இருவருடனும் தொடர்பில் இருந்த சிவகங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டிலும், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், கணினி பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள், புத்தகங்கள், பிரபாகரனின் படங்கள், துப்பாக்கி தயாரிப்புக்கான உப பொருள்களை வாங்கியதற்கான ரசீதுகள், வெடி மருந்துகள், விஷ மருந்து தயாரிப்பதற்காக சேகரித்து வைத்திருந்த விஷ விதைகள், வனப்பகுதிக்குள் செட் போடுவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். 

 

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சேலத்தில் கைது செய்யப்பட்ட நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ், சிவகங்கையைச் சேர்ந்த அவர்களுடைய கூட்டாளி விக்னேஷ்வரன் ஆகியோர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், சில முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி இருந்ததும் தெரிய வந்தது. அவர்களை குறிவைத்து வெடி மருந்துகள், வெடி பொருள்கள் தயாரித்து வந்துள்ளனர். 

 

சிவகங்கையில் நடந்த சோதனையில் துப்பாக்கிகள், சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்களை கைப்பற்றியுள்ளோம். இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரையும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர். 

 

விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள வாலிபர்கள், தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு குறி வைத்து செயல்பட்டு வந்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்