
திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த 38 வயதான பெரியசாமி அப்பகுதியில் வெல்டிங் பட்டறையும், ஒர்க் ஷாப்பும் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பார்வதி(33). இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற மகனும், 3 வயதில் ஆதிரா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ஸ்ரீ தேவ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கோடைகால விடுமுறையையொட்டி சிறுவன் ஸ்ரீதேவ் முக்காணியில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டில் தங்கியுள்ளான்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(8.5.2025) காலையில் வழக்கம் போல பெரியசாமி வெல்டிங் பட்டறைக்கு பணிக்குச் சென்று விட்டார். பார்வதியும், குழந்தை ஆதிராவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை நேரத்தில் பெரியசாமியின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை ஆதிரா மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பார்வதி கதறி அழுது கொண்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தை ஆதிராவை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஆதிராவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் உள்ளிட்ட போலீசார் குழந்தை ஆதிரா உயிரிழந்தது குறித்து தாய் பார்வதியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், மாலையில் நானும் எனது குழந்தை ஆதிராவும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது, எனது குழந்தையின் அழுகுரல் கேட்டு கண் விழித்து பார்த்தபோது, வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை ஆதிராவின் கழுத்தை நெரித்தவாறு என்னிடம் தாலி சங்கிலியை கழட்டி தருமாறு கேட்டார். உடனே அதிர்ச்சியடைந்து நான், எனது சங்கிலியை கழட்டிக் கொடுத்தேன். அப்போது குழந்தையை கீழே இறக்கிவிட்டார். அப்போது ஆதிராவிற்கு மூச்சு பேச்சு இல்லாமல் சுருண்டு விழுந்ததை கண்ட அந்த மர்ம நபர் தாலி சங்கிலியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான தடையங்களை கைப்பற்றிய போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே குழந்தை ஆதிராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இச்சம்பவத்தில் அதிரடி திருப்பமாக குழந்தை ஆதிராவின் தாய் பார்வதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த பார்வதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்திருக்கிறார்.
அதில் பார்வதி எம்.எஸ்.சி ஐடி முடித்துவிட்டு திருமணத்திற்கு முன்பு இரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். திருமணமான பிறகு வேலைக்கு செல்லாமல் கணவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்திருக்கிறாராம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பார்வதியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் பார்வதி கடும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் மாலை கணவர் வெளியே சென்றபோது வீட்டில் தனியாக இருந்த போது ஆத்திரத்தில் தொட்டில் கயிற்றால் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலைசெய்துவிட்டு, திருடன் கொலை செய்தது போன்று நாடகமாடியது தெரியவந்தது.