
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயது இளைஞர் கங்காதரன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். அதற்காக திருமண(மேட்ரிமோனி) இணையதளம் ஒன்றில் தனது புகைப்படம் மற்றும் சுய விவரங்களைப் பதிவு செய்துள்ளார். இதனைப்பார்த்து இளம் பெண் ஒருவர் கங்காதரனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
அதன்மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு செல்போன் எண்களைப் பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் மாறி மாறி பேசிவந்துள்ளனர். அதேசமயம் இளம் பெண் கங்காதரனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்க அதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், ஆண்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளார். அத்துடன் அதிகளவில் பணத்தை முதலீடு செய்தால் அமெரிக்க டாலரின் பெரியளவில் வருமானம் பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பெண் கூறியதை முழுவதுமாக நம்பிய கங்காதரன், கொஞ்சம் கொஞ்சமாக இளம் பெண் கூறிய ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்துள்ளார். அப்படியாக மொத்தம் ரூ.39 லட்சம் வரை கங்காதரன் முதலீடு செய்துள்ளார். ஆனால், கடைசி வரை வருமானமே வராததால், சந்தேகமடைந்த கங்காதரன் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பல முறை அழைத்து அந்த இளம்பெண் அழைப்பை எடுக்கவில்லை.
இறுதியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கங்காதரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.