Skip to main content

 “ஆசிரியருக்குக் கால் அமுக்கிவிட்டு கல்வி கற்றேன்” - ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

 Governor Ravi said that he got education by serving the teacher

 

“எனது குருவான ஆசிரியரின் வீட்டில் தண்ணீர் இறைத்து, அவர் தூங்கும் போது கால்களை அமுக்கி சேவை செய்து கல்வி கற்று வந்தேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் அரங்கில் ஆளுநரின் எண்ணித்துணிக பகுதி 9 என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருந்து பெற்ற 24 பேருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பள்ளி ஆசிரியர்களுடன் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும்  8 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்வேன் . என்னுடைய குருவான ஆசிரியரின் வீட்டில் தண்ணீர் இறைத்து, அவர் தூங்கும் போது கால் அமுக்கி சேவை செய்து கல்வி கற்றேன். அது நமது பாரம்பரியம்; இது பல ஆயிரம் ஆண்டுகாலமாக இருந்து வந்தது. எல்லாரும் காலகாலமாக ஆசிரியர்கள் என்றுதான் அழைக்கிறார்கள்; ஆனால் மரபுப்படி அவர்களை குரு என்றுதான் அழைக்க வேண்டும். மதிப்பெண்கள் வாங்க வைப்பது மட்டும் ஆசிரியரின் கடமை அல்ல; மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். 

 

தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்களின் பொறுப்பு அதிகமாக உள்ளது. நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்வதில் ஆசிரியர்களுக்குப் பங்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.