
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும், உயிருடன் இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டிற்கு தாலிபான் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது. ஷரியா சட்டத்தின் அடிப்படையில் சதுரங்க விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வழிமுறை என்று கருதப்படுகிறது. அதே சமயம் மத கலாசாரத்திற்கு எதிராக செஸ் விளையாட்டு இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது அதனால், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் கொடுக்கும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தாலிபான் அரசாங்கத்தின் விளையாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஆப்கானிஸ்தானில் இருக்கும் செஸ் பிரியர்களுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது.