
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 30ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை தொடரும். நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா ஒடிசா பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் மத்திய, மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. சென்னையின் திநகர், கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர், பூந்தமல்லி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், திருநின்றவூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பாடி, கொரட்டூர் பகுதியிலும் மழை பொழிந்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.