
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி (23.04.025) நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனையை நடத்துவதாக அரசு சார்பில் கூறுவதை ஏற்க முடியாது. எங்களுக்கு முன் உள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்தே குற்றம் நடந்துள்ளதா? என விசாரிக்க முடியும். எனவே அமலாக்கத்துறையின் சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்பதை விசாரிக்க முடியாது. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேசநலனுக்கானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (16.05.2025) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் இருந்த விசாகனை (அவரது இல்லத்தில் இருந்து) அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (16.05.2025) மாலை 3 மணியளவில் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறையின் தென் மண்டல தலைமை அலுவலகத்தில் வைத்து விசாகனிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் அவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு விசாகன் மனைவியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக விசாகன் வீட்டருக்கே உள்ளா சாலையோரம் கிழிந்த நிலையில் வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பான ஆவணங்கள் கிடந்தன. அதில் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்ட வார்த்தைகள் அந்த உரையாடலில் இடம்பெற்றிருந்தன. எனவே கிழிந்த நிலையில் இருந்த ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.