Skip to main content

“இருட்டைக் குறைகூறுவதைவிட, ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது” - கீ.விரமணி

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

Dravida Kazhagam provides 'Periyar Maniyamai' hospital for covid

 


தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். மேலும், இதற்காகச் செலுத்தப்படும் நிதி அனைத்தும் கரோனா நிவாரணத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், அதன் கணக்குவழக்குகள் வெளிப்படைத்தன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், திராவிடர் கழகம் சார்பில் பெரியார் மணியம்மை மருத்துவமனை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்றுக்கொண்டது. மேலும், முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

 

இதுதொடர்பாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளர் கி. வீரமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் வீச்சு நாளுக்கு நாள் அதிகமாகி, பாதிப்புக்குள்ளாவோர் தொகையும் அதிகரிக்கும் வேதனை பெருகுகிறது.

 

மருத்துவ அடிக்கட்டுமான வசதிகளும், மருத்துவமனைகளும், படுக்கைகளும், மருத்துவப் பணியாளர்களின் தன்னலம் துறந்த தொண்டறமும், இவற்றை முன்னுரிமையாகக் கொண்டு ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்‘ என்பதற்கொப்ப நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இமை துஞ்சா கடமையாற்றலும், கண்காணிப்புடனும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் புயல் வேகத்தில் செயல்பட்டாலும், நோயாளிகள் எண்ணிக்கை நாளும் பெருகுவதால் ஊரடங்கு தொடங்கி 3, 4 நாட்களாகியும் - எண்ணிக்கை குறையவில்லை என்பதோடு சென்னை பொது மருத்துவமனையான ராஜீவ் காந்தி மருத்துவமனையிலேயே ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டோர் - மருத்துவமனையில் படுக்கை இல்லாமல், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆம்புலன்ஸ் வேனிலேயே நால்வர் இறந்தனர் என்ற துயரச் செய்தி நம் நெஞ்சை வாட்டுகிறது; இதயத்தைக் கசக்கிப் பிழியச் செய்கிறது!

 

துடிப்போடு விரைந்து செயல்படும் மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர்

இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி, அப்பகுதி ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ உதவிகள் வழங்கிவரும் பெரியார் மணியம்மை மருத்துவமனை என்ற சிறிய மருத்துவமனையை கரோனா கொடுந்தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க - தமிழக அரசின் மருத்துவத் துறை எப்படி, எந்தப் பிரிவுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியுமோ, அப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்து, துடிப்போடு விரைந்து செயல்படும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியனிடம் நாம் தொலைபேசிமூலம் கூறி, கடிதமும் அனுப்பினோம்.

 

திமுக அரசுக்கு நன்றி!

 

அவர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த யோசனையை - வேண்டுகோளை ஏற்று, மருத்துவமனையைத் தக்க வகையில் பயன்படுத்திக்கொள்ள முன்வந்து அதற்கான ஏற்பாட்டினை அதிகாரிகள் மூலம் செய்யத் தொடங்கிவிட்டார் என்பதை மிகுந்த அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். திமுக அரசுக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். தற்போதுள்ள 30 படுக்கை வசதியை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேலும் விரிவாக்கிட திட்டமிடுவார்கள் என்று நம்புகிறோம்.

 

‘இருட்டைக் குறைகூறுவதைவிட, ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது’ என்பது போன்ற மிகவும் எளிமையான சிறு துளி முயற்சி இது என்றாலும், மற்றவர்களும் வாய்ப்புள்ள இடங்களில் இம்முறையைப் பின்பற்றலாமே!

 

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் 10 லட்சம் ரூபாய் நன்கொடை

 

போர்க்கால நடவடிக்கை, புயல் வேகத்தில் தமிழக அரசால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சீரிய முறையில் நடைபெறுகையில், நாமும் நம்பிக்கை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்