Skip to main content

சின்மயி விவகாரத்தில் ஏன் எல்லோரும் மவுனமாக இருக்கிறார்கள்? தமிழிசை 

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

tha


எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சேலத்தில் இன்று (அக்டோபர் 13, 2018) கூறினார்.


பாஜக மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சேலம் வந்திருந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எந்த ஒரு நலத்திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். கடந்த பத்து ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்திற்கு என்ன நல்லது செய்தார்கள்? 


தமிழக நலனில் எப்போதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. நெல்லை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய அரசு மருத்துவக்கல்லூரிகளில் 150 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் மத்திய அரசு நிதியில்தான் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர, செங்கல்பட்டில் 600 கோடி ரூபாயில் புதிதாக தடுப்பூசி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து பெண்களும் போகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சபரிமலைக்கு பெண்களும் சென்றால் கூட்டம் அதிகரிக்குமே என்று கமல் கூறுகிறார். அவர் சினிமா தியேட்டருக்கு கூட்டம் வருவதுபோல் நினைத்து சொல்கிறார். சபரிமலைக்குச் செல்வது வழிபாட்டுக்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் பண்பாடு சீர்குலையும். இதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. இந்த தீர்ப்புக்கு எதிரான அமைதிவழி போராட்டங்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது.


கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் எஸ்வி. சேகர், வேறு ஒருவருடைய பதிவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கே அவரை பலரும் நேரடியாக குற்றம் சாட்டினார்கள். சின்மயி விவகாரத்தில் ஏன் எல்லோரும் மவுனமாக இருக்கிறார்கள்?


பெண்களுக்கு அநீதி இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாலியல் புகார்கள் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.


முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், புகார் சொல்லப்பட்டது என்பதற்காகவே அவர் பதவி விலக வேண்டும் என்பது அவசியம் இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகலாம். 2ஜி குற்றச்சாட்டின்போது ஏன் திமுக பதவி விலகவில்லை? 


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு, பிரதமர் மோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவார்.  இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்