Skip to main content

அரைகுறை கருக்கலைப்பு; குடும்பக்கட்டுப்பாடு!  -அரசு மருத்துவமனை பீதியில் புனிதா!

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

 

விருதுநகர் அரசு மருத்துவமனையில்,   கருக்கலைப்பைச் சரிவரச்  செய்யாமல்  ஒரு பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்திருக்கின்றனர் அரசு மருத்துவர்கள். அதனால், அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இருப்பதாக மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.  

 

a


 
திருமங்கலம் அருகிலுள்ள மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புனிதா. இவரது கணவர் ஆசை.  இத்தம்பதியருக்கு,   இரண்டு ஆண் குழந்தைகள்,  இரண்டு பெண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், ஐந்தாவதாக கருவுற்றிருக்கிறார் புனிதா. காரியாபட்டி தனியார் மருத்துவமனை ஒன்று,  இந்த விபரத்தை புனிதாவிடம் கூறிவிட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்துகொள்ள ஆலோசனை வழங்கியிருக்கிறது. புனிதாவோ மதுரை செல்லாமல் அருகிலுள்ள விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். 

 

a

 

முதலில் கருக்கலைப்பு செய்துவிட்டு குடும்பக்கட்டுப்பாடும் செய்துவிடலாம் என்று புனிதாவிடம் தெரிவித்த விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கருக்கலைப்பை அரைகுறையாகப் பண்ணிவிட்டு,  , குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். எட்டு நாட்களுக்குப்பின்  வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, புனிதாவுக்கு எடுத்த ஸ்கேனைப் பார்த்த அரசு மருத்துவர்கள், கருக்கலைப்பை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதை அறிந்துகொண்டனர். உடனே, புனிதாவிடம் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சென்று பேசி, தங்களின் தவறை ஒத்துக்கொண்டனர்.

a

 

மீண்டும் புனிதாவை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாத்திரை வைத்தால், உள்ளே எஞ்சியிருக்கும் கருவின் சிறுபகுதி வெளியில் வந்துவிடும் எனச்சொல்லி, புனிதாவுக்கு மாத்திரை வைத்திருக்கின்றனர். ஆனாலும்,  விருதுநகர் அரசு மருத்துவமனையின் அரைகுறை சிகிச்சை குறித்த பயத்தால் பீதிக்கு ஆளாகி,  அங்கிருந்து கிளம்பிவிட்டார் புனிதா. தற்போது, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல்,   திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைக்கும் அலைந்த வண்ணம் இருக்கிறார்.  

p

 

சமீபத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றி பெரும் விவகாரமாக வெடித்தது இதே விருதுநகர் மாவட்டத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதார வசதியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளைத்தான் முழுமையாக நம்பியிருக்கின்றனர். அறுவை சிகிச்சை போன்றவற்றில் அரசு மருத்துவர்கள் இப்படி அலட்சியமாக நடந்துகொள்ளும்போது, அந்த நம்பிக்கை தகர்ந்துவிடுகிறது. பொதுவாக, நோயாளிகள் மீதான அக்கறையின்மை, ஊழியர்களின் மெத்தனம் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக, நடுத்தர மக்களில் பெரும்பாலானோர்  அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதே இல்லை. மேலும்,  கையூட்டு பெறும் ஊழியர்கள், பணம் தராத நோயாளிகளை அவமரியாதையாக நடத்துவதெல்லாம்  அங்கு சகஜமாக நடப்பதுதான். அவசர நேரத்தில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களே இருப்பதில்லை. கழிப்பறைகள், பார்வையாளர் பகுதியெல்லாம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், நோயாளிகளைப் பார்ப்பதற்குச் செல்பவர்கள்கூட நோய்த்தொற்று குறித்த அச்சத்திலேயே சென்று வருகின்றனர். 

‘நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 

அந்த அரசு மருத்துவமனை சுவரில் நாம் கண்ட இக்குறள் வழியில் அரசு மருத்துவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை சாதனைகள் மற்றும் சுகாதாரத்திட்டம் குறித்து விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவரும் அரசுக்கு, மேற்கண்ட குறைகளைக் களைவதிலும் முனைப்பு வேண்டும்.


 


 

சார்ந்த செய்திகள்