Skip to main content

‘காணொலிக் காட்சி வழக்கு விசாரணை தோல்வி அடைந்துள்ளது!’ -அனைத்து நீதிமன்றங்களையும் திறப்பதற்கு வலியுறுத்தும் பார் கவுன்சில்!  

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

high court chennai


காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பது முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அனைத்து நீதிமன்றங்களையும் திறந்து வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
 


சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் ஒன்பது மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகளை விசாரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வழக்கறிஞர் சங்கங்களுடன் காணொலி மூலமான ஆலோசனைக் கூட்டத்தை பார் கவுன்சில் நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன், சென்னையில் உள்ள சங்கங்கள், தமிழகம் முழுவதும் உள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும், செல்போன் மூலமாகவும் கலந்து கொண்டனர்.
 

 


அந்த ஆலோசனைக் கூட்டத்தில், காணொலிக் காட்சி மூலம் நடத்தும் விசாரணையின் பாதகங்கள் குறித்தும், அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க அனுமதி வேண்டுமெனவும்,  தலைமை நீதிபதியையும், சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவையும் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அளித்துள்ள பேட்டியில், “காணொலிக் காட்சி மூலம் நடத்திய முழுமையான விசாரணை உகந்ததாக இல்லை.  இதுகுறித்து ஆலோசித்தோம். பெரும்பாலான சங்கங்கள், வீடியோ கான்பரன்ஸை ஒட்டுமொத்தத் தோல்வி எனச் சொல்லியுள்ளன. 2% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கும் பாதிப்பு. அதனால், முழுமையாகச் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் 33 நீதிமன்றங்கள் மூலம் விசாரணை தேவையில்லை. தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகக் குழுவுக்கு கோரிக்கை வைக்கிறோம். தமிழகம், புதுச்சேரி முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும். தலைமை நீதிபதி அமர்வில், பட்டியலிட்ட வழக்குகளையே அட்டண்ட் பண்ண முடியவில்லை. வழக்கு ஆவணங்கள் வக்கீல்களின் அறையில் உள்ளன. பல துறைகளில் தளர்வு அளித்துள்ள நிலையில்,  வழக்கறிஞர் தொழிலுக்கு இல்லை.” என்றார். 
 

http://onelink.to/nknapp


மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும்,  “மதுரைக் கிளை மற்றும் ஒன்பது மாவட்ட நீதிமன்றங்கள் போல அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழக்குகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.” என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்