Skip to main content

கருப்புக் கொடி; கல் வீச்சு - கங்கனாவிற்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Kangana Ranaut convoy incident people Shown Black Flags In Himachal

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7ஆம் தேதி குஜராத், மராட்டிம், கோவா உள்ளிட்ட 94 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குபதிவு மே13ஆம் தேதி தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கும் நடைபெற்றது.

இதையடுத்து இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும் என 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 

இதையடுத்து ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும், ஏழாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியும் அடுத்தடுத்து நடக்கவிருக்கிறது. ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத், சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் பிரச்சாரத்தின் போது அவர் பேசியது சில சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில், “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” எனக் கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதாக தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்திருந்தார்.

பின்பு அமிபதாப் பச்சனுடன் தன்னை ஒப்பிட்டும், சினிமாவிலிருந்து தான் விலக முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவில் இருந்து விலகிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள காசாவுக்கு பிரச்சாத்திற்காக சென்ற பாஜக மாண்டி வேட்பாளர் கங்கனா ரனாவத்துக்கு, அங்கிருந்த மக்கல் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு “கங்கனா ரனாவத் திரும்பிப் போ” என்று கோஷங்களை எழுப்பினர்.

Kangana Ranaut convoy incident people Shown Black Flags In Himachal

இந்தச் சம்பவம் குறித்து ஹிமாச்சல பிரதேசத்தின் எதிர்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்கூர் கூறும்போது, “நானும் கங்கனாவுடன் சென்றிருந்தேன். காங்கிரஸ் கட்சியினர் எங்கள் பிரச்சார வாகனங்களை கல்லால் தாக்கினர். மேலும் உள்ளே செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினர். இந்தக் குளறுபடிக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் அரசின் அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் செயல்பட்டனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன்” என்றார்.  ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடப்பதும் வரும் ஜுன் 1 அன்று அங்கு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்