Skip to main content

விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் ஏரி!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
Veeranam lake turned into a playground

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் மொத்த அகலம் 5.6 கி.மீ. ஏரியின் பரப்பளவு 15 சதுர மைலாக உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் அளவு 47.50 அடியாகும். ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் (1.465 டி.எம்.சி) கன அடியாகும். ஏரியின் கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது.

இந்த ஏரியின் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இப்படிப்பட்ட இந்த  ஏரி தூர்ந்து போய் மண்மேடாக காணப்படுகிறது. பல இடங்களில் முட்செடிகள் வளர்ந்துள்ளன.  தற்போது கோடையில் சுட்டெரிக்கும் வெயிலால் ஏரி முழுவதும்  தண்ணீர் இன்றி வறண்டு போய் உள்ளது. இதனால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

வீராணம் ஏரியில் நீர் இல்லை என்றாலே சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட குதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் . மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும். எனவே கோடையைப் பயன்படுத்தி  ஏரியில் படர்ந்துள்ள வண்டல் மண்ணை ஒரு மீட்டர் ஆழத்திற்கு  அப்புறப்படுத்தி ஆழப்படுத்தி ஆங்காங்கே உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும். ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரியில் தண்ணீர் இல்லாததால் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. இதில் இளைஞர்கள், மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடுகின்றனர்.

இதுகுறித்து வீராணம் ஏரியின் ராதா மதகு வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரெங்கநாயகி கூறுகையில், “தற்போது ஏரி வறண்டுள்ளது. இந்த நேரத்தில் ஏரியை முழுமையாக தூர் வாரிட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் பெருவாரியாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்து தூர் வாருவது என்பது சிரமமாக கருதினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிக குறைந்த கட்டணத்தை செலுத்தி வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்தால் அனைவரும் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்வார்கள். அதன் பிறகு ஏரியை சமன் செய்தாலே அதிக தண்ணீரைத் தேக்க முடியும் இதனால் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்” என்றார்.

வீராணம் ஏரி வறண்டு கிடப்பதைப் பார்த்து கோடையில் சுற்றுலாவிற்கு வரும் பொதுமக்கள் மனம் வருந்தி செல்கிறார்கள். அதே நேரத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள விவசாயிகள் ஏரி தண்ணீரில்லாமல் உள்ளதைப் பார்த்து விவசாய பணிகளை மேற்கொள்ளாமல் வேதனை அடைந்து வருகிறார்கள். தமிழக அரசு இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில், “வீராணம் தூர் வாருவதற்காக ரூ.277 கோடிக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.  இதற்கிடையில் அரசாணை எண் 50-ன் படி விவசாயிகள் வறண்ட நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து நிலத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உள்ளது. அதன் அடிப்படையில் வீராணம் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் க்கு கடிதம் எழுதியுள்ளேன். இன்னும் மூன்று மாத காலத்திற்கு ஏரிக்கு தண்ணீர் வராது. அவர் அனுமதி கொடுத்தால் விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஏரியில் அதிகமான தண்ணீரை தேக்குவதற்கும் வசதியாக இருக்கும்” என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, “அரசாணைப்படி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் அனுமதி கிடைத்தவுடன் விவவாயிகள் மற்றும் பொதுமக்கள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும்” என்றார்.

சார்ந்த செய்திகள்