
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மத்திய பா.ஜ.க அரசின் கனவுத் திட்டம் ஆகும். அந்த திட்டத்தை அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனை மீறியும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு ஒன்றை அமைத்தது. இந்த குழு, பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. அதன்மூலம் 18 ஆயிரத்து 626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.
இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி (12.12.2024) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் (17.12.2024) தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 27 மக்களவை உறுப்பினர்கள் என 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில் சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் இன்று (05.04.2025) கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிடோர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “கடந்த 1960ஆம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்று வந்தது. நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து தவறாக நினைப்பவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தலை கண்முடித்தனமாக எதிர்க்க வேண்டாம். வரும் 2029ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறையை அப்போதைய குடியரசுத் தலைவர் தொடங்குவார்” எனப் பேசினார்.