
மணப்பாறை அருகே குளத்திலும், கிணற்றிலும் குளிக்கச் சென்ற 19 மற்றும் 17 வயது சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியம், எளமணம் அடுத்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த முருகன் – அழகம்மாள் தம்பதியினரின் மகள் போதும்பொண்ணு(19). இவர், பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காகக் காத்திருந்திருக்கிறார். இவர், மருங்காபுரி ஒன்றியம் சீரங்கம்பட்டியில் வசித்து வரும் தனது தாய் வழி தாத்தா சின்னத்துரை வீட்டிற்கு விடுமுறைக்காகச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அப்பகுதியில் இருந்த லத்திகா(18), பிரதீபா(18), கீர்த்திகா(13), ஜெயதாரணி(15) ஆகியோருடன் அருகில் உள்ள சீரங்கம் குளத்திற்கு போதும்பொண்ணுவும் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கீர்த்திகா என்ற சிறுமி முதலில் நீரில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சிறுமியை காப்பாற்ற முயன்ற சிறுமிகள் ஒவ்வொருவராக நீரில் மூழ்கிய நிலையில், சிறுமிகள் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற சுரேஷ் என்பவர் குளத்திலிருந்து சிறுமிகள் 5 பேரையும் மீட்டுள்ளார். அதன்பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முதலுதவிக்கு பின் வளநாடு அரசு மருத்துவமனைக்கு அச்சிறுமிகளை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், போதும்பொண்ணு உயிரிழந்தவிட்டதாகக் கூறியுள்ள்ளனர். அதையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய வளநாடு போலீஸார் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். மற்ற சிறுமிகள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

அதேபோல், வையம்பட்டி ஒன்றியம் சரவணம்பட்டியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சரவணன் என்பரின் மகள் சத்யா(17), பள்ளி படிப்பை முடித்துவிட்டு கரூரில் உள்ள ஒரு துணி கடையில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை தினமான நேற்று வீட்டில் இருந்த சத்யா, தனது நண்பர்களுடன் அவரின் உறவினர் கிணற்றுக்குச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் பழக கிணற்றில் குதித்த சத்யா, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்து வெளியே வராததால் உடனிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தீயணைப்புத்துறை வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்றும் கிணற்றில் ஆழம், தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறுமியை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆழ்துளை கிணறு பழுது நீக்க பயன்படுத்தப்படும் நீர் மூழ்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றின் அடிக்கு அனுப்பி தேடினர். அதில், கிணற்றுக்கு அடியில் கிடந்த சிறுமி அடையாளம் காணப்பட்டு பின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சிறுமியின் உடலை கைப்பற்றிய வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.