Skip to main content

குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது: ஆளுநர் பன்வாரிலால்!

Published on 17/04/2018 | Edited on 17/04/2018



பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நிலையில், குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்திருந்தது. அத்துடன் அவரை கைது செய்யக்கோரி மாணவர்களும், பெற்றோர்களும், மகளிர் அமைப்பினரும் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, நிர்மலா தேவி வீட்டின் உள்பக்கம் பூட்டிவிட்டு கதவை திறக்காமல் இருந்தார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த நிர்மலா தேவியை காவல்துறையினர் அதிரடியாக பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று கைது செய்தனர்.





நிர்மலா தேவியின் கணவர் சரவணபாண்டியன், சகோதரர் மாரியப்பன் முன்னிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். அந்த விசாரணையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நடத்துவார் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் நள்ளிரவு முழுவதும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சார்ந்த செய்திகள்