
மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுத்த அரசாங்கம், எஸ்.வி.சேகர் மீது ஏன் இன்னும் எடுக்கவில்லை? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழிசைக்கு எதிராக கருத்து சொன்னால் கைது செய்கிறார்கள். இதுவே பெண்களுக்கு எதிராக கருத்து சொல்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறார்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாக உடனடி நடவடிக்கை எடுத்த அரசாங்கம், எஸ்.வி. சேகர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இது பாரபட்சமான செயல்பாடாகும்.
தமிழகத்தில் நேர்மையற்ற ஆட்சி நடக்கிறது. போராட்டத்தை முடக்க நினைப்பது சர்வாதிகாரம் ஆகும். தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று வரை கைது செய்து வருவது பெரிய அடக்குமுறை ஆகும்.
தமிழக அரசை ஆதரிக்கவில்லை என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்திருப்பது ஜனநாயக படுகொலை ஆகும். தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தட்டும். அப்படி தேர்தல் வந்தால் எடப்பாடி அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.
தமிழக அரசு வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக மாற்ற முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது. சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டம் முட்டாள்தனமான ஒன்று. இதனால் தான் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.