
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது கள்ளபட்டி. இந்த பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 40) என்பவர் காவலராக பணியாற்றி வந்தார். இவர் இன்று (27.03.2025) பணியை முடித்துவிட்டு முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சில அடையாளம் தெரியாதவர்களுடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் முத்துக்குமார் தனது நண்பர் ராஜாராமுடன் அருகில் உள்ள தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த தகவலை அறிந்த மதுக்கடையில் இருந்த கும்பல், இருவரையும் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் காவலர் முத்துக்குமாரைக் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அவருடன் இருந்த ராஜாராமும் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், உசிலம்பட்டி டி.எஸ்.பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தங்கள் பணிகளைச் செய்யும் காவல்துறையினரின் பாதுகாப்பு பறிபோவதற்கு காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும்.
முதல்வரே இந்தியாவைக் காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் அரசியல் ஸ்டண்ட்களை (Political Stunt) கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் ஆட்சி அதிகாரத்திற்குள் (Jurisdiction) இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள். காவலர் முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய நிதி உதவியும் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.