

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அம்மா பேட்டையில் வசித்து வருபவர் கேஸ் அடுப்பு சரி செய்யும் தொழிலாளி சினனையன். இவரது வீட்டில் மார்ச் 26 ஆம் தேதி இரவு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் கேசவன் (வயது 52) என்ற கொத்தனார் குடிபோதையில் திருடுவதற்கு உள்ளே வந்துள்ளார். அப்போது சின்னையன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் கேசவன் அவரை அங்கிருந்த கத்தியை எடுத்து வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கேசவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்ற நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்பு உள்ளது என்று தெரிய வந்தது. மேலும் விசாரணையில் இந்த கொலையை அவர்தான் செய்தார் என ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேசவனும் கொலை செய்யப்பட்ட நடராஜனும் ஒரே இடத்தில் வேலை செய்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நடராஜனை கேசவன் கொலை செய்துள்ளார். இதனை அண்ணாமலை நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கத்தி வெட்டை கொண்டு அறிவியல் பூர்வமாக கைது செய்துள்ளனர்.
மேலும் கேசவன் திருமணம் ஆகாதவர் நன்னிலத்திலிருந்து சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டையில் அவரது சித்தி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று இப்பகுதியில் மது குடித்துவிட்டு சிறு சிறு பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர் மீது நன்னிலம் மற்றும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளது என்பது தெரிய வருகிறது. மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவகிறோம்” எனக் கூறினார். கடந்த 5 வருடங்களாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அனுப்பிய சம்பவம் பாராட்டுக்குரியது என இதில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறையினருக்கும் காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து கூறினார்.