
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்தபடியே உள்ளன. சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் கடற்கரை என்பவர் இளவரசி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அங்கு 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 2 அறைகள் தரைமட்டமாயின. குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகிய மூவர் உயிரிழந்தனர். படுகாயமுற்ற இருளாயி என்பவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. மாரனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்பமான பருவநிலை ஒரு காரணம் என்றாலும், பட்டாசு உற்பத்திக்கான ரசாயனக் கலவையைச் செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டதால் வெடிவிபத்து நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த வெடிவிபத்தில் பலியான 3 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், சிகிச்சை பெறும் இருளாயிக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.