
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். அதைக்கண்டு டிடிவியும் அவருடைய ஆதரவாளர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் டிடிவியின் தீவிர ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் ஆண்டிபட்டி தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்கதமிழ்செல்வனும் கூடிய விரைவில் திமுகவுக்கு தாவப் போகிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எதிரொலித்தும் வருகிறது.
இது சம்பந்தமாக தங்க தமிழ்செல்வனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது... பொதுச்செயலாளர் சின்னம்மாவுக்கும், துணைபொதுச்செயலாளர் அண்ணன் டிடிவிக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு கட்சிபணி ஆற்றிவருகிறேன். இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. வேண்டுமென்றே அப்படி ஒரு பொய்யான தகவலை அரசியல் எதிரிகள் பரப்பி இருப்பார்கள். அது தான் உண்மை. தற்பொழுது கூட அரசியல் சூழ்நிலைகளை பற்றி பேசுவதற்காக சின்னம்மாவை சந்திக்க பெங்களூர் போகிறேன். அதுபோல் தொடர்ந்து சின்னம்மாவுக்கும், அண்ணன் டிடிவிக்கும் விசுவாசமாக இருப்பேனே தவிர மாற்று கட்சியான திமுகவுக்கோ. அதிமுகவுக்கோ போகமாட்டேன் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தான் என்னுடைய பணி தொடருமே தவிர கட்சி தாவல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் கூடிய விரவில் அதிமுகவில் உள்ள இபிஎஸ், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி பக்கம் வர இருக்கிறார்கள் என்று கூறினார்.