Skip to main content

“என்.எல்.சி. விபத்து பற்றி மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்" -கே.எஸ்.அழகிரி

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
tamilnadu congress ks.azhagiri interview

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கடலூரில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர்,

"கரோனா வைரஸ் நடவடிக்கையில் மத்திய அரசை பொறுத்தவரை ஒரு தெளிவான நிலை அவர்களுக்கு கிடையாது. சென்ற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் தொற்று கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு உலகத்தில் மூன்றாவது இடத்தில் நாம் இருக்கிறோம். தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு என்று பார்த்தால் மூன்றாவது இடம்.  ஆனால் இன்றைக்குதான் டெல்லியில் 10,000 பேர் தங்கக் கூடிய ஒரு மருத்துவமனையை தற்காலிகமாக மோடி அரசாங்கம் அமைத்து இருக்கிறார்கள்.

சீனாவில் இந்த தொற்று ஏற்பட்ட 15 நாட்களில் 10 ஆயிரம் பேருக்கான மருத்துவமனை ஆரம்பித்தார்கள். மத்திய பா.ஜ.க விரைந்து செயல்படும் அரசு என்று சொன்னால் நான்கு மாத காலத்தை மோடி அரசாங்கம் எடுத்துக் கொண்டதற்கான காரணம் ஏன்? இந்தியாவினுடைய தலைநகரம் காரோனாவால் துவண்டு கிடக்கிறது. மத்திய அரசாங்கத்தை நான் கேட்கிறேன், இது என்ன ஆமை வேகமா அல்லது சிறுத்தை வேகமா என்பதை அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஏராளமான பேருக்கு பரிசோதனை செய்திருக்க முடியாதா, முடியும். ஆனால் இந்த அரசாங்கம் இந்த விஷயத்தில் போதிய கவனத்தை செலுத்தவில்லை என்பது தமிழக காங்கிரஸ் கருத்து.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் நடைபெற்ற மோதல் துரதிருஷ்டவசமானது, சீனர்கள் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள். ஆனால் அதை விடவும் மோசமான விஷயம் பிரதமர் இதுவரைக்கும் தெளிவான விளக்கம் தரவில்லை.  நம்முடைய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள என்று சொன்னால் அவர்கள் நம்முடைய மண்ணில் கொல்லப்பட்டார்களா? அல்லது சீனாவின்  எல்லையில் கொல்லப்பட்டார்களா? என்பது தெரிய வேண்டும். கல்வான் பகுதியில் இருக்கிற அப்பகுதி மக்கள்  என்ன சொல்கிறார்கள் என்றால் ஏராளமான இடங்களை சீன ராணுவம் கைப்பற்றி இருப்பதாக அவர்கள் சமூக ஊடகங்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்தியப் பிரதமர் நம்முடைய எல்லையில் சீனர்கள் இல்லை, நாம் சீன எல்லையில் இல்லை என்று சொல்லுகிறார். அப்படி என்றால் இந்த வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? எங்கே கொல்லப்பட்டார்கள்? என்ற தெளிவு நமக்கு தெரிய வேண்டும்.

 

tamilnadu congress ks.azhagiri interview

 

இந்த கேள்வியை நாம் கேட்டால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் தேசபக்தி இல்லை, ராணுவத்தின் மீது உங்களுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறார்கள்.  காங்கிரஸ் கட்சியை விட, இந்தியாவில் இருக்கிற எதிர்க்கட்சிகளைவிட தேசத்தின் மீது,  ராணுவத்தின் மீது நம்பிக்கை உடைய இயக்கங்கள் வேறு எதுவும் கிடையாது. ஆனால் ஒரு பிரதம மந்திரி உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது தார்மீக கடமை.  அந்த கடமையை அவர் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.  இரண்டு தினங்களுக்கு முன்பு கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார்.  அங்கே பேசும்பொழுது சீனாவிற்கு எதிராக  ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சீன அரசாங்கத்தை விமர்சிக்கவில்லை. சீன ராணுவத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை

ஏன் பிரதம மந்திரி அவர்களை எதிர்த்து கண்டனம் தெரிவிக்க தயங்குகிறார்? அந்த தயக்கத்திற்கு காரணம் என்ன?  எழுச்சி ஏற்படுத்த வேண்டிய நேரம் அல்லவா அந்த எழுச்சியை ஏற்படுத்தாமல் அவர்களை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் பிரதம மந்திரி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இதைவிட மோசம் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்,  செயலாளர் இரண்டு பேருமே மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார்கள்.  

 

tamilnadu congress ks.azhagiri interview


நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் இந்தியாவிலேயே ஒரு மிகச்சிறந்த தொழில் நிறுவனமாக இருந்து வந்தது. பெயரும் புகழும் பெற்று, அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனம். ஆனால் இப்போது சமீபகாலமாக விபத்துகள் நிகழ்கின்றன. இரண்டாவது விபத்தும் முதல் விபத்தைப் போன்றே இருக்கிறது.  முதல் விபத்து ஏற்பட்டபோதுகூட அதற்கு ஒரு சமாதானம் சொல்லலாம். ஆனால் இரண்டாவது முறை ஒரு விபத்து ஏற்படுகிறது என்று சொன்னால் அந்த நிர்வாகம் எங்கே தவறு செய்தார்கள்? எதில் குறைகள் இருக்கிறது? என்பதை பற்றிய ஒரு தெளிவான விளக்கம்  வேண்டும்.

மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் அந்த நிறுவனம் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அதிகாரிகள் தன்னுடைய கடமையை முறையாக செய்திருக்கிறார்களா? என்.எல்.சி நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் கடந்த காலத்தைப் போல இப்போதும் உறுதியாக இருக்கிறதா அல்லது தொய்வாக இருக்கிறதா? இவை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். என்.எல்.சி. நிறுவன அதிகாரிகளை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன். இந்த உயிரிழப்பிற்கு அவர்கள் ஈடு கொடுக்க முடியாது, இது மிகப்பெரிய தவறு. ஒருமுறை நிகழ்ந்தால் அது விபத்து, இரண்டாவது முறையும் நடந்தால் அது அலட்சியம். அதற்கான விளக்கத்தை அதிபர் சொல்ல வேண்டும்.  மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார். இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்